| ADDED : நவ 27, 2025 02:14 AM
ஈரோடு: ''அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை, கருணாநிதி அறிவுறுத்தி சட்டசபையில் நான் அறிமுகம் செய்ததை, பெருமையாக கருதுகிறேன்,'' என, பொல்லான் முழு உருவ சிலையுடன் கூடிய அரங்கம் திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில், சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் முழு உருவ சிலையுடன் கூடிய அரங்கம், 4.90 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் நேற்று சிலையை திறந்து வைத்து, அரங்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். பின்னர், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த, 2019ல் நான் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, பொல்லானுக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதற்கு நான் உறுதியளித்தேன். இன்று அது நிறைவேறி உள்ளது. ஆங்கிலேயர் படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட பொல்லானின் வீரத்தை, காலத்துக்கும் எடுத்து காட்டும் வகையில் சிலை மற்றும் அரங்கம் அமைக்க கோரினர். அதை நிறைவேற்றி உள்ளோம். கருணாநிதி, அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த முனைந்தார். ஆனால், உடல் நலக்குறைவால் அவரால் நிறைவேற்ற முடியவில்லை. மாறாக மருத்துவமனையில் இருந்து என்னை அழைத்தார். அருந்ததியர் உள் ஒதுக்கீடு மசோதாவை, சட்டசபையில் அறிமுகப்படுத்த வேண்டும் என, என்னிடம் கூறினார். அதன்படி அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை சட்டசபையில் அறிமுகப்படுத்தினேன். இதில் என் பங்களிப்பும் இருந்தது என்பது எனக்கு பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ஈரோடு மாவட்டம், அரச்சலுார் அருகே ஓடாநிலையில் அமைந்திருக்கும், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் மணிமண்டபத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று வருகை புரிந்தார். மணிமண்டபத்தின் நுழை வாயிலில் இருந்த, தீரன் சின்னமலையின் முழு உருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.