உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலித்தாலும் மதுக்கடை ஊழியர்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலித்தாலும் மதுக்கடை ஊழியர்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

சென்னை:மதுக்கடைகளில், பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் விலை வைத்து விற்கும் பணியாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மேற்பார்வையாளர் உட்பட அனைவரையும், 'சஸ்பெண்ட்' செய்யுமாறு மேலாளர்களுக்கு, 'டாஸ்மாக்' உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,820 கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மதுபான வகைகளை விற்கிறது. ஒரு கடையில் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் உட்பட ஐந்து - ஆறு பேர் பணிபுரிகின்றனர்; மேற்பார்வையாளரே கடையின் பொறுப்பாளர்.

உத்தரவு

மது வகைகளுக்கு அரசு நிர்ணயம் செய்திருக்கும் விலையை விட, 180 மி.லி., 'குவார்ட்டர்' பாட்டிலுக்கு, 10 ரூபாய், 375 மி.லி., 'ஹாப்' பாட்டிலுக்கு, 20 ரூபாய், 750 மி.லி., 'புல்' பாட்டிலுக்கு, 30 ரூபாய் வரை கூடுதலாக பணத்தை, ஊழியர்கள் வசூலிக்கின்றனர். இதனால், 'குடி'மகன்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பணத்தில், மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களுக்கு பங்கு போவதால், கடை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று புகார்கள் எழுகின்றன. இந்நிலையில், அரசு நிர்ணயம் செய்திருப்பதை விட கூடுதலாக, 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் விலை வைத்து விற்கும் பணியாளர், அக்கடை மேற்பார்வையாளர் உட்பட அனைவரையும் கூட்டு பொறுப்பாக்கி, 'சஸ்பெண்ட்' செய்ய, மேலாளர்களுக்கு டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.

சுற்றறிக்கை

இதுகுறித்து, டாஸ்மாக் நிர்வாகம், மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கூடுதல் விலைக்கு விற்ற பணியாளர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை கள், அபராதம் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், சமீப காலமாக மதுக்கடைகளில் தொடர்ந்து கூடுதல் விலை வைத்து விற்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைத் தடுக்க, மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக, 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் விலை வைத்து விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அக்கடை பணியில் உள்ள மேற்பார்வையாளர் உட்பட அனைவரையும் கூட்டு பொறுப்பாக்கி, அவர்களை உடனே தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும்.கூடுதல் விலைக்கு மது விற்றால், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை, அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களும், சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளும், தவறாது கடைபிடிக்க வேண்டும். இந்த சுற்றறிக்கையை, அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கி, ஒப்புதல் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை