உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உணவுக்கு 5 சதவிகிதம் டெலிவரிக்கு 18சதவிகிதம் கூடுதல் செலவுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்

உணவுக்கு 5 சதவிகிதம் டெலிவரிக்கு 18சதவிகிதம் கூடுதல் செலவுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்

சென்னை:ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு காரணமாக பல்வேறு உணவுப் பொருட்கள் விலை குறையும் என சந்தோஷப்படுவது சரி. அதேநேரம் அவற்றை ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்தால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. வரும் 22ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., 2.0 அமுலாகிறது. அன்றிலிருந்து பல்வேறு பொருட்கள், சேவைகளுக்கான ஜி.எஸ்.டி., கட்டணங்கள் மாற்றம் பெற உள்ளன. மேலும் ஸ்விக்கி, சொமாட்டோ உள்ளிட்ட செயலிகள் வாயிலாக உணவு ஆர்டர் செய்தால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். காரணம் உணவு டெலிவரிக்கான ஜி.எஸ்.டி. கட்டணம் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் உணவு ஆர்டர் செய்யும் போது, இரண்டு ஜி.எஸ்.டி., கட்டணங்களைச் செலுத்த வேண்டும். உணவுப் பொருள் விலையின் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி.யை ஓட்டல்களுக்கும், டெலிவரிக்கான 18 ஜி.எஸ்.டி.யை ஸ்விக்கி, சொமாட்டோ போன்றவற்றுக்கும் செலுத்த வேண்டும். இந்த இரண்டு தொகைகளும், டெலிவரி செய்யும் நிறுவனங்களே வசூல் செய்யும். அதில் 5 சதவீத ஜி.எஸ்.டி.யை. அவர்கள், ஓட்டல்களுக்கு வழங்குவர். இது மட்டுமல்ல; இன்னொரு அடிப்படை கட்டணமும் சேர்ந்து உள்ளது. அதாவது, ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள், தங்களுடைய தளத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை ஏற்கனவே உயர்த்தியுள்ளன. ஸ்விக்கி, ஒருசில நகரங்களில், தன்னுடைய கட்டணத்தை, ஜி.எஸ்.டி., யோடு சேர்த்து, 15 ரூபாய் என்று உயர்த்தியுள்ளது. சொமாட்டோ நிறுவனமோ, ஜி.எஸ்.டி. இல்லாமல் 12.50 ரூபாய் என உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு முறை உணவு ஆர்டர் செய்யும் போதும், இந்தக் கட்டணம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும். இந்நிலையில், 18 சதவீத ஜி.எஸ்.டி. கட்டணமும் சேரும்போது, ஒவ்வொரு ஆர்டரும் குறைந்தபட்சம் 2 முதல் 2.60 ரூபாய் வரை உயரக்கூடும். இதற்கு முன்னர் உணவுக் கட்டணத்தோடு, 5 சதவீத ஜி.எஸ்.டி. மட்டும் வசூல் செய்யப்பட்டது. டெலிவரிக்கு என்று தனியே ஜி.எஸ்.டி. இல்லை. இனிமேல், உணவுப் பொருளின் விலைக்கு மேலே, டெலிவரி வலைதளத்தைப் பயன்படுத்தும் பிளாட்பாரம் கட்டணம், டெலிவரிக்கான ஜி.எஸ்.டி. ஆகியவையும் சேரும். இன்றைய சூழலில் ஒவ்வொரு முறையும் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வருவது என்பது முடியாத ஒன்று தான். இருந்தாலும், ஹோட்டலுக்கு போய் சாப்பிடுவதா, நாமே வாங்கி வருவதா அல்லது, ஆர்டர் செய்வதா என்பதை எதற்கும் ஒரு முறை யோசித்து விட்டே செய்வது பர்சுக்கு நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
செப் 17, 2025 11:31

மக்களிடம் வசூலிக்கும் சேவை வரிகள் அரசுக்கு செலுத்தாமல் அதிகார வர்கத்தின் உதவியால் கொள்ளை அடிக்கப்படுகின்றன. அரிதினும் அரிதாக சிலர் பிடிபடுகின்றனர்.


சமீபத்திய செய்தி