| ADDED : ஜன 18, 2024 02:51 AM
மயிலாடுதுறை:பாரத தேசம் ராம ராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டது என தமிழக கவர்னர் ரவி பேசினார்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்துார் கிராமத்திற்கு தமிழக கவர்னர் ரவி தனது மனைவியுடன் நேற்று வந்தார். கலெக்டர் மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.தொடர்ந்து கம்பர் பிறந்து, வாழ்ந்த கம்பர்மேடு பகுதியை பார்வையிட்டார். தேரழந்தூர் ஆமருவியப்பன் கோவிலுக்கு சென்று பெருமாளை சேவித்தார். பின்னர், கம்பர் மணி மண்டபம் முன் உள்ள கம்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து மணிமண்டபத்தில் தஞ்சாவூர் மண்டல ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற 'அயோத்தி ராமனும், தமிழ் கம்பனும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டார். 7 பேருக்கு கம்பர் விருது வழங்கி கவர்னர் ரவி பேசியது: பாரதம் முழுவதும் ராம பக்தி மயமாக காட்சியளிக்கிறது. சங்க இலக்கியங்களில் ராமரின் புகழ் ஒலித்துக் கொண்டே உள்ளது. நமது அரசியல் அமைப்பின் அடிநாதம் ராம ராஜ்ய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.ராமரை சாதாரண மக்களிடையே அடையாளப்படுத்தியது கம்பர்தான். அதன் பிறகே ராமாயணம் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. பல்வேறு இனம், மொழி, கலாசாரங்களைக் கொண்ட மனிதர்களை ஒரே குடும்பமாக கொண்ட பாரத தேசத்தின் ஆன்மா ராமர் தான். இதனை அடிப்படையாகக் கொண்டே அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் நமது மக்களை, மாணவ மாணவியரை, இளம் தலைமுறையினரை கம்பரை பற்றி அறிய செய்ய வேண்டும் என்றார்.முன்னதாக கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேத்திரபாலபுரம் பகுதியில் கருப்பு கொடி காட்டிய கம்யூனிஸ்ட்கள், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் உள்ளிட்ட 52 பேர் கைது செய்யப்பட்டனர்.