- நமது நிருபர் - ''பாரதத்துக்கு, மகத்தான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. பாரதம் ஒரு முதன்மையான நாடாக உயர்ந்த இடத்தில் இருக்கும்,'' என, சிருங்கேரி ஜகத்குரு அருளாசி வழங்கினார். புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம், இந்தியா பவுண்டேஷன் சார்பில், அனைத்து அமைப்புகளும் இணைந்து சுவாமிகளுக்கு மரியாதை செய்யும் விழா, இந்தியா ஹேபிடட் வளாகத்தில், 24ம் தேதி நடந்தது. ஸ்ரீ ஆச்சார்யர் அருளாசி வழங்கி, ''தர்மம், அதர்மம் - புண்ணியம், பாவம் குறித்து அனைவரும் அறிய வேண்டும். 'அத்வைதம்' தான், உலகம் என்பது ஒரே குடும்பம் என்ற உண்மையை கண்டறிய உதவுகிறது. சிந்தனையில் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் எவ்வாறு அடைய முடியும் என்பதற்கு ஒரு உயரிய பரிமாணத்தையும் காண்பிக்கிறது. பாரதத்துக்கு, மகத்தான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. பாரதம் ஒரு முதன்மையான நாடாக உயர்ந்த இடத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வழக்கறிஞர்கள், தர்மத்திற்காக வாதிடுங்கள்; தர்மத்தை நிலைநாட்டுங்கள். நீங்கள் பெரிய உயரங்களை அடைவீர்கள்,'' என்று வாழ்த்தினார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ஜகத்குரு ஆதி சங்கராசாரியாருக்கு ஆழ்ந்த மரியாதை செலுத்தினார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: அத்வைத வேதாந்தத்தின் நித்திய ஞானத்தை உலகுக்கு பரப்புவதில், சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, ஆன்மிக ஒளிவிளக்காக மிளிர்கிறார். கடந்த, 12 நுாற்றாண்டுகளாக சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் கருணை, சேவை, வேத சாஸ்திர பரம்பரை பாதுகாப்பு, சமஸ்கிருத வளர்ச்சி, மற்றும் அறிஞர்கள் - ஆச்சாரியர்களை உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஸ்ரீ சுவாமிகளின் அருள் வார்த்தைகள், மக்களின் மனதை பண்படுத்துவதோடு, எதிர்மறை சிந்தனைகளிலிருந்து விலக செய்கின்றன. ஜகத்குருவின் ஆன்மிக ஒளி, அவரைச் சந்திக்கும் ஒவ்வொருவரின் சிந்தனை மற்றும் பார்வையையும் மாற்றும் வல்லமை கொண்டது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இந்தியா பவுண்டேஷன் தலைவர் ராம் மாதவ்ஜி, இந்தியா ஹாபிடேட் சென்டரின் தலைவர் ஸ்ரீனிவாஸ் உட்பட, அமைச்சர்கள், எம்.பி.,க்கள், முன்னாள் கவர்னர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் சிருங்கேரி சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.