| ADDED : டிச 08, 2025 12:18 PM
சென்னை: அமைச்சர் நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்திருக்கும் லஞ்சம், முறைகேடு புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கேஎன் நேரு, டெண்டர்களில் முறைகேட்டில் ஈடுபட்டு 1,020 கோடி சம்பாதித்ததாகக் கூறி, தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், டெண்டர் முறைகேடு மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர் நியமனத்தில் லஞ்சம் பெற்ற புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை; திமுக ஆட்சியில் ஊழல் நடப்பது என்பது பெரிய விஷயமல்ல. ஆனால், தற்போது மலைபோல ஆதாரங்களுடன் தவிர்க்க முடியாத நிலையில் இருக்கிறது. அமைச்சர் கேஎன் நேரு வேலைவாய்ப்பு நியமனத்திற்கு ரூ.888 கோடி லஞ்சம் வாங்கியதை தொடர்ந்து, தற்போது 1,020 கோடி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக 252 பக்க அறிக்கையை டிஜிபியிடம் அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது. உறவினர்கள் மூலம் ஒப்பந்ததாரர்களிடம் பணம் வாங்கி, மிகப்பெரிய அளவிலான கொள்ளை நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், வாட்ஸ்அப் உரையாடல்கள், ஹவாலா பணமோசடி குறித்த விபரங்களையும் அமலாக்கத்துறை கொடுத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசில் சிறப்பாக செயல்பட்ட ஒரே துறை, கலெக்ஷன், கமிஷன் மற்றும் கரப்ஷன் துறை மட்டும் தான். உடனடியாக, டெண்டர் முறைகேடு மற்றும் பணியாளர் நியமனத்தில் லஞ்சம் பெற்ற புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.