உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் அ.தி.மு.க, அமளி

சட்டசபையில் அ.தி.மு.க, அமளி

சென்னை, ஜூன் 22- சட்டசபையில் நேற்று கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக பேச அனுமதிக்காததால், அ.தி.மு.க.,வினர் அனைவரும் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து கோஷமிட்டனர். அவர்களை கூண்டோடு வெளியேற்ற, சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். கள்ளச்சாராய பலிகளுக்கு துக்கம் தெரிவிக்கும் விதமாக, அ.தி.மு.க., உறுப்பினர்கள் நேற்று கருப்பு சட்டையில் வந்தனர். சபை துவங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி எழுந்து பேசினார்; சபாநாயகர் அனுமதி தரவில்லை. பழனிசாமிக்கு மைக் இணைப்பு வரவில்லை. எனவே, அவர் ஆவேசமாக என்ன பேசினார் என்பது புரியவில்லை.

உத்தரவு

சபாநாயகரை கண்டித்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள் கோஷமிட்டபடி அவரது இருக்கை முன் தரையில் அமர்ந்தனர். அவர்களை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி, பழனிசாமி உட்பட அ.தி.மு.க.,வினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.''இங்கு நடந்த நிகழ்வு குறித்து பத்திரிகைகள் செய்தி வெளியிடக்கூடாது,'' என அப்பாவு அறிவித்தார். சற்று நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் சபைக்கு வந்தார். ''கடந்த 2001ல் கடலுார் மாவட்டம் பண்ருட்டியில், இதே போன்ற நிகழ்வில் 52 பேர் இறந்தனர். அப்போது, அ.தி.மு.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதை பற்றி பேச்சு வருமோ என்ற பயத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டு, ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். ''என்றாலும், மானிய கோரிக்கை விவாதத்தில் எதிர்க்கட்சியினரும் பங்கேற்க வேண்டும். எனவே, வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் சபைக்கு வர அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.சபாநாயகர் அதை ஏற்று, ''கேள்வி நேரம் முடிந்ததும், அ.தி.மு.க., உறுப்பினர்கள் உள்ளே வரலாம்,'' என்றார். எனினும், பழனிசாமியோ, அவரது கட்சியினரோ வரவில்லை.

போராடி மீட்டோம்

சபையில் நடந்தது குறித்து, வெளியில் பழனிசாமி கூறியதாவது:கள்ளச் சாராய பலிகள் குறித்து பேச சபாநாயகர் அனுமதி தரவில்லை. வலுக்கட்டாயமாக எங்களை காவலர் களைக் கொண்டு வெளியேற்றினார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமாரை, 'அலேக்'காக துாக்கி வந்து, கைது செய்ய முயற்சி செய்தனர்; போராடி அவரை மீட்டோம். எதிர்க்கட்சியை அடக்கி ஒடுக்கி கைது செய்ய முனைவது என்ன நியாயம்? இது, ஹிட்லர் ஆட்சி போல் உள்ளது. போலீஸ் நிலையம், நீதிமன்ற வளாகம் அருகிலேயே கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. மரணங்களுக்கு பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.மூன்று பேர் சாராயம் குடித்து இறந்ததாக அவர்களின் குடும்பத்தினரே சொன்ன பிறகும், இல்லை இல்லை; வயிற்றுப்போக்காலும், வயது முதிர்வாலும், வலிப்பு நோயாலும் இறந்தனர் என, கலெக்டர் கதை அளந்திருக்கிறார். அவர் உண்மையை மறைக்காமல் இருந்தால், சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனைக்கு சென்றிருப்பர்; உயிர் பலிகள் அதிகரித்து இருக்காது. ஒரு கலெக்டர் தெரிந்தே பொய் சொல்ல மாட்டார்; அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அந்த பேட்டியின்போது, தி.மு.க., உறுப்பினர் உடன் இருந்துள்ளார். எனவே, தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு பழனிசாமி கூறினார்.தேர்தலோடு முடியும் உறவு!சட்டசபைக்கு வெளியே நேற்று பழனிசாமி மேலும் கூறியதாவது: 'எங்களுக்கு தகவல் கிடைத்திருந்தால், சாராய விற்பனையை தடுத்திருப்போம்' என்று அமைச்சர் வேலு சொல்கிறார். எங்கள் எம்.எல்.ஏ., செந்தில்குமார், ஒரு வாரம் முன்னரே எஸ்.பி.,யிடம், 'கள்ளச்சாராயம் அதிகம் விற்கப்படுகிறது; தடுத்து நிறுத்துங்கள்' என போனிலும், நேரிலும் வலியுறுத்தினார்; சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். எதையுமே அரசு கண்டுகொள்ளவில்லை. தி.மு.க., கவுன்சிலர்கள் இருவர், சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்ததையும் காவல் துறை விசாரிக்கவில்லை.தி.மு.க., கூட்டணி கட்சிகள் இந்த சம்பவத்தை கண்டுகொள்ளவில்லை. கூட்டணி என்பது தேர்தலுக்கானது. அதை தேர்தலோடு நிறுத்திக் கொள்ளுங்கள். தி.மு.க., அரசின் அநீதிகளுக்கு துணை போகாதீர்கள். மக்கள் பிரச்னைக்காக குரல் எழுப்புங்கள். இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும், அரசை கண்டிக்காமல் இருந்தால் அடுக்குமா? அ.தி.மு.க., ஆட்சியில், துாத்துக்குடியில் இரண்டு பேர் மரணத்துக்கு சி.பி.ஐ., விசாரணை கேட்ட ஸ்டாலின், இன்று 50 பேர் இறந்ததை சி.பி.ஐ., விசாரிக்க கேட்க வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

வெளிநடப்புகள்

* நயினார் நாகேந்திரன், ''கள்ளச் சாராயத்தால், இரண்டு ஆண்டுகளில் 70 பேர் இறந்துள்ளனர். போலீஸ் நிலையம் அருகிலேயே சாராயம் விற்றுள்ளனர். இதன் பின்னணியில் யார் இருக்கின்றனர் என கண்டுபிடிக்க வேண்டும்,'' என்றார். அவர் பேசியதும், பா.ஜ., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.* ஜி.கே.மணி, ''சந்து கடைகளில் பாக்கெட் சாராயம் விற்பது போலீசாருக்கு தெரியாதா? தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கு அறிவிக்கப்படும் என்கிறீர்கள். சொன்னபடி டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்,'' என்றார். அவர் முடித்ததும், பா.ம.க.,வினர் வெளிநடப்பு செய்தனர். * வைத்திலிங்கம், ''காவல் துறை அஜாக்கிரதையால் இத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இனியாவது இப்படி நடக்காமல் இருக்கும்படி நீங்கள் செயல்பட வேண்டும்,'' என்றார்.அதை தொடர்ந்து அவரும், மனோஜ் பாண்டியனும் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kasimani Baskaran
ஜூன் 22, 2024 14:29

பத்திரிக்கைகளை செய்தி வெளியிடக்கூடாது மாறாக திராவிட பாரம்பரியத்தின் அருமையை அள்ளி விடவேண்டும். அப்படியென்றால் மொத்த திராவிட கடவுள்களும் பிடித்த மூன்று திராவிட முன்னோடிகளை போட்டுக்கொள்ளவும் சந்தோசப்பட்டு மாதம் மும்மாரி மழை பெய்யும்.


Rajah
ஜூன் 22, 2024 11:36

எந்த ஆட்சி வந்தாலும் கள்ள சாராயத்தை தடுக்க முடியாது. கள்ளுக் கடைகளை திறப்பதுதான் ஓரளவு நல்ல வழி. அரசின் டாஸ்மார்க் வருமானம் குறைந்துவிடும் என்பதால் அதைச் செய்யமாட்டார்கள். அனைத்து கட்சிகளும் இனைந்து இதற்கான ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அது நடக்குமா?


Sampath Kumar
ஜூன் 22, 2024 10:46

இவங்க ஆட்சிலே நடக்காது மாதிரி பொய் சொல்லி பொழுதை கழிக்கும்


R.PERUMALRAJA
ஜூன் 22, 2024 08:57

முதல்வர் அவசர ஆலோசனை , தலைமை செயலர் அவசர ஆலோசனை , காவல்துறை உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை , கலெக்டர் அவசர ஆலோசனை என்கிறாரக்ள் , என்ன அவசர ஆலோசனை என்று தெரியவில்லை , இவர்களின் அவசர ஆலோசனைகளை கள்ளச்சாராய வியாபாரிகள் குப்பைத்தொட்டிகளில் இருக்கும் கழிவுகள் போல நினைத்து சில மணி நொடிகளில் மீண்டும் கள்ளச்சாராயம் நிற்காமல் ஆறாக பெருக்கெடுத்து ஓட வழிசெய்கின்றனர் .


R.PERUMALRAJA
ஜூன் 22, 2024 08:43

எங்களுக்கு வாக்களிக்காத தமிழகம் இருந்தால் என்ன ஒழிந்தால் என்ன என்று மத்தியில் இருப்பவர்கள் கடுப்பில் இருப்பார்கள் , அவர்கள் கண்டிப்பாக மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் காரணம் ஆட்சிக்கு பிரச்னை வரும் பட்சத்தில் தி மு க வின் கதவை தட்டுவதற்கே , இதையே காரணமாக கொண்டு மத்தியில் ஆளுபவரையும் தி மு க வையும் ஒரு சேர கண்டித்து போராட்டம் வெடிக்க எதிர்க்கட்சிகள் மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்த கட்சியாக மாறிவிடும் அரசியல் களமும் சூடுபிடித்துவிடும்


R.PERUMALRAJA
ஜூன் 22, 2024 08:30

ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராயம் சாவு நிகழும் பொழுது , பெயரளவுக்கு ஒரு DSP , நாலு SI , ஒரு collector இடமாற்றம் செய்யப்படுகின்றனர்... . cuddalore விழுப்புரம் மரக்காணம் கள்ளக்குறிச்சி திண்டிவனம் சிதம்பரம் போன்ற பகுதிகளை ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் அந்த பகுதி பெரும்பான்மை ஜாதியினரின் கட்சி தலைவரை கையில் போட்டுகொண்டு பல வருட கணக்கில் குல தொழில் போல செய்து கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை


R.PERUMALRAJA
ஜூன் 22, 2024 08:20

எப்பெல்லாம் மழைவெள்ளம் , கள்ளச்சாராய சாவு போன்ற துக்க நிகழ்வுகள் நடந்து கொத்து கொத்தாக மக்கள் இறக்கிறார்க்ளோ , துயரப்படுகிறார்களோ , அப்பெல்லாம் சட்டசபையில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த ஜால்ராக்கள் " இந்த சோக நேரத்தில் அரசியல் பேச விரும்பவில்லை , யார் மீதும் குறை சொல்ல விரும்பவில்லை , இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் " என்று சொல்லி மக்கள் வாயை அடக்கி விடுகிறார்கள் , ஒரு சில வாரங்களில் மீண்டும் கள்ளச்சாராய நடமாட்டம் துவங்கிவிடுகிறது ,


R.PERUMALRAJA
ஜூன் 22, 2024 08:13

கள்ளசாராயம் உயிர் இழப்பு என்பது ஆளும் கட்சியின் மறைமுக வருவாயின் உச்சத்தின் வெளிப்பாடே ,, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை போல , எதிர்க்கட்சிகள் ஏதோ கண்டித்தோம் , கருப்பு சட்டை அணிந்தோம் , சட்டசபை படிக்கட்டில் குட்டிக்கரணம் அடித்தோம் என்றில்லாமல் மாத கணக்கில் போராட்டத்தை அவிழ்த்து விடுவது , கள்ளசாராய பந்த் அறிவிப்பது , முக்கிய தலைநகரங்களில் மாபெரும் பேரணி நடத்துவது போன்றவைகளும் முக்கியமானவையே . உண்மையில் போராடுகிறார்களா அல்லது பெயரளவுக்கு போராடுகிறார்களா என்று மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் .


மோகனசுந்தரம்
ஜூன் 22, 2024 07:28

திராவிட கட்சி ஆட்சிக்கு வந்தது.


Kasimani Baskaran
ஜூன் 22, 2024 14:21

அருமையான கருத்து.


Raj
ஜூன் 22, 2024 07:09

அன்று தி மு க.... இன்று அ தி மு க.... நாளை யாரோ? இது தான் சட்டசபையின் நிலை இவர்களை தேர்ந்தெடுத்தது இதற்கு தான்.... 2026 வந்தாலும் இவர்களை தான் நாம் தேர்ந்தெடுப்போம் இது தான் தமிழகத்தின் சாபக்கேடு.... அதனால் தான் இந்த சவக்காடு கள்ளக்குறிச்சி.......


மேலும் செய்திகள்







புதிய வீடியோ