பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்புகள்: ஐ.ஐ.டி., அறிமுகம்
சென்னை:பள்ளி மாணவர்களுக்கு, 10 விதமான சான்றிதழ் படிப்புகளை, சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது.பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்ப கல்வியை அறிமுகம் செய்யும் வகையில், 'பள்ளி இணைப்பு திட்டம்' என்ற திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் செயல்படுத்துகிறது. இதன்படி ஏற்கனவே, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு எனும் 'டேட்டா சயின்ஸ் அண்ட் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்' மற்றும் மின்னணு அமைப்புகள் எனும் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆகிய படிப்புகளை அறிமுகம் செய்துஉள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யின், 'அவுட்ரீச்' மற்றும் மின்னணு கல்வி மையத்தின் மூலமாக நடத்தப்படும் இந்த படிப்புகளுடன் கூடுதலாக, கட்டடக்கலை- வடிவமைப்பு, கணிதம், கணினி தொடர்பான விளையாட்டுகள், புதிர்கள் உள்ளிட்ட படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளன.ஆகஸ்ட், அக்டோபர், ஜனவரி ஆகிய மாதங்களில், இரண்டு மாத சான்றிதழ் படிப்பாக, இந்த கல்வி திட்டம் செயல்படுத்தப்படும். இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்கலாம். இதில் தங்கள் மாணவர்களை இணைக்க, பள்ளிகள், வரும் 25ம் தேதிக்குள், https://code.iitm.ac.in/schoolconnect/ என்ற இணையதள இணைப்பின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.