உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாடா என் செல்லமே... அம்மா தவிச்சு போயிட்டேன்!

வாடா என் செல்லமே... அம்மா தவிச்சு போயிட்டேன்!

வால்பாறை: தாயை பிரிந்து தவித்த குட்டி யானையை 'ட்ரோன்' கேமிரா வாயிலாக கண்காணித்து, 5 மணி நேரத்திற்கு பின், தாயுடன் வனத்துறையினர் சேர்த்தனர்.கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் முதல்பிரிவு பகுதியில், கடந்த, 29ம் தேதி தாயை பிரிந்த, 5 மாத குட்டி யானை தனியாக தவித்தது.தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர், மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு காவலர்கள், மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாயை பிரிந்து மூன்று கி.மீ., துாரம் தள்ளி வந்தது தெரிந்தது.தாயை பிரிந்த குட்டி, அங்கும், இங்கும் ஓடியதால் அதனை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்தனர். ஒரு வழியாக குட்டி யானையை மீட்டு, லாரியில் ஏற்றினர்.

அதன்பின், யானைகள் நடமாட்டத்தை 'ட்ரோன்' கேமிரா வாயிலாக கண்டறிந்து, ஐந்து மணி நேரத்திற்கு பின், காட்டு யானைகள் கூட்டத்துடன் குட்டி யானையை சேர்த்தனர். குட்டி யானையை தாயுடன் சேர்ந்த மகிழ்ச்சியில் வனத்துறையினர் நிம்மதியடைந்தனர்.

செயலர் பாராட்டு

இச்சம்பவத்தை, வனத்துறை செயலாளர் சுப்ரியாசாஹூ தனது 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்தார். அதில், 'வால்பாறையில் தாயை பிரிந்து தவித்த குட்டியானையை வனத்துறையினர் தாயுடன் சேர்ந்துள்ளனர்' என, குறிப்பிட்டு, குட்டி யானை தாயின் அரவணைப்பின் உறங்கும் காட்சியை பதிவு செய்துள்ளனர்.'வனத்தில் இருந்து வழி தவறி பிரிந்து வந்த குட்டியானையை தாய்க்கூட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது, 2023ல் மன நிறைவு நிகழ்வுடன் நிறைவடைந்துள்ளது,' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனதில் பதிந்த காட்சி!

மானாம்பள்ளி வனச்சரகஅலுவலர் மணிகண்டன் கூறியதாவது: பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் காலை, 8:30 மணிக்கு கூட்டத்தில் இருந்து பிரிந்த, 5 மாத குட்டி யானை ரோட்டில் அங்கும் இங்கும் ஓடி செல்வதை கண்ட மக்கள், வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற மனித - வன விலங்கு மோதல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர்கள், குட்டியானையை மீட்டு, லாரியில் பாதுகாப்பாக ஏற்றினர். தாயை பிரிந்த குட்டியானை ஒரு புறம் தவிக்க, குட்டியை பிரிந்த யானை வனப்பகுதியில் சப்தம் எழுப்பிக்கொண்டே இருந்தது.அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டதால், முதலில் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் 'ட்ரோன்' கேமிரா வாயிலாக, யானைகள் கூட்டம் இருக்கும் இடத்தை கண்டறிந்து, குட்டி யானையை தாயுடன் சேர்க்க, மதியம், 1:30 மணிக்கு அழைத்து சென்றோம்.குட்டியின் சப்தம் கேட்டதும், 11 யானைகள் ஓடி வந்தன. அதை கண்டதும் வனத்துறையினர் பயந்து போனோம். ஆனால், குட்டியின் தும்பிக்கையை பிடித்து தாய் யானை இழுத்து சென்றதும் மற்ற யானைகள் அமைதியாகி பின் தொடர்ந்தன. இந்த காட்சி மனதில் இருந்து என்றுமே மறையாது. தாயுடன் குட்டி யானையை சேர்த்த மன நிறைவுடன் திரும்பினோம். இவ்வாறு, கூறினார்.

கைகொடுத்த 'ட்ரோன்'

குட்டி யானையை தாயுடன் சேர்த்தது குறித்து, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, ''வால்பாறை வனப்பகுதியில் கூட்டத்திலிருந்து பிரிந்து தனியாக தவித்த குட்டி யானையை வனத்துறையினர் உடனடியாக மீட்டு, உரிய நேரத்தில் தாயுடன் சேர்த்து வைத்த சம்பவம் மனதை நெகிழச்செய்துள்ளது.'ட்ரோன்' கேமரா உதவியால் இது சாத்தியமானது. யானையின் பாசப்போராட்டத்தை உணர்ந்து, தாயுடன் சேர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது. மானாம்பள்ளி வனத்துறை ஊழியர்களுக்கு 'சபாஷ்' சொல்லணும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பெரிய ராசு
ஜன 04, 2024 16:57

சுப்ரியாசாஹூ அவங்களை கொண்டு காட்டுக்குள்ளே விட்டுட்டு வந்துருங்க .


r.sundaram
ஜன 04, 2024 14:48

செய்தியை படிக்கும்போதே மனதில் இனம்புரியாத ஒரு சந்தோசம் ஏற்படுகிறது, பாராட்டுக்கள் வனத்துறையினருக்கு.


RAMAKRISHNAN NATESAN
ஜன 04, 2024 11:48

ஆஹா .... மகிழ்ச்சி ..... நன்றி .......


rama adhavan
ஜன 04, 2024 11:45

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படமாக தமிழக அரசு இதனை தேர்வு செய்யலாம்.


தமிழ்வேள்
ஜன 04, 2024 17:27

இல்லை ..தமிழக அரசின் விருப்ப தேர்வு , டாஸ்மாக்கில் குடித்து விழுந்து மட்டையாகி கிடைக்கும்


Ramesh Sargam
ஜன 04, 2024 09:03

மிருகங்களுக்கு இடையே இருக்கும் அந்த 'மிருதாபிமானமும்' (மனிதாபிமானம் போல...) மக்களிடை இல்லையே என்று வருந்துகிறேன்.


வாய்மையே வெல்லும்
ஜன 04, 2024 08:53

வேளச்சேரி யில்/ இதர பகுதிகளில் மக்களை வெள்ளத்தினால் சூழ்ந்த தண்ணீரில் தத்தளித்தபோது ஈவு இரக்கமின்றி தலைக்கு இரண்டாயிரம் ரூபாயை லவட்டிய ஆட்களை நினைத்தால் மனம் வெம்புகிறது.. இந்த பெட்டிச்செய்தியில் விட்டாங்க துயருண்ட யானைகிட்டையும் அரசு ஆட்டைய போட்டிருக்கும் ..அதற்கு குடுக்க வழியில்லை.. அதனால இனாம் சர்வீஸ்.. மசால் வடை அரசு வாழ்க


M.Malini
ஜன 04, 2024 06:07

சிறப்பான செயல். வாழ்த்துகள்.


N Annamalai
ஜன 04, 2024 06:05

சபாஷ் அனைவருக்கும் எப்படி சேர்ப்பார்கள் என்று நானும் கவலைப் பட்டேன் ?.மிக்க மகிழ்ச்சி


Duruvesan
ஜன 04, 2024 05:21

நன்றி, மகிழ்ச்சி


Kasimani Baskaran
ஜன 04, 2024 05:19

நிபந்தனையில்லா தாயன்புக்கு இணையான ஒன்றை கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. தாயையும் சேயையும் சேர்த்து வைத்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ