பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்த மின் ஊழியர்கள் போராட்டம்
சென்னை,:தமிழக மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு, பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, மாநி லம் முழுதும், மாவட்ட மேற்பார்வை பொறியாளர்கள் அலுவலகம் முன், நேற்று, மின் ஊழியர் மத்திய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . சென்னை நுங்கம் பாக்கம், வள்ளுவர் கோட்டம் எதிரில் உள்ள அலுவலகம் முன் நடந்த மறியல் போராட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இது குறித்து, மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் கண்ணன் கூறியதாவது: 'சட்டசபை தேர்தலின் போது, பொதுத்துறை நிறுவனங்களில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் காணும் பணி இன்னும் துவக்கப்படவில்லை. எனவே, முதலில் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு, மின் வாரியம் நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் நடந்த போராட்டத்தில், 7,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.