ஐந்தாண்டு மற்றும் அதற்கு மேலான ஆண்டுகள், தண்டனை பெறக்கூடிய கடும் குற்றம் புரிந்து, அது தொடர்பாக, கோர்ட்டில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தால், அவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து, தகுதி இழக்கச் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரவும் தீர்மானித்துள்ளது. தேர்தலில் கறுப்புப் பண புழக்கத்தையும், கிரிமினல்கள் ஆதிக்கத்தையும் குறைக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதனால், தற்போதைய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், மூன்று முக்கியத் திருத்தங்களைக் கொண்டுவர, முந்தைய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி நடவடிக்கை எடுத்தார்.
இந்த மூன்று முக்கிய மாற்றங்களுக்கு, தற்போதைய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் ஒப்புதல் அளித்து, அது தொடர்பான குறிப்பு ஒன்றை, அமைச்சரவையின் பரிசீலனைக்காக, பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்.மாற்றங்கள் தொடர்பான, இந்த குறிப்புகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், திருத்தம் கொண்டுவருவது தொடர்பான வரைவு மசோதா தயாராகும். இந்தச் சட்டத் திருத்தங்கள் அமலுக்கு வந்தால், ஒருவர் ஐந்து ஆண்டு மற்றும் அதற்கு மேலான ஆண்டுகள் தண்டனை பெறக்கூடிய குற்றங்கள் புரிந்து, அதுதொடர்பான குற்றச்சாட்டுக்கள் கோர்ட்டில் சுமத்தப்பட்டிருந்தால், அந்த நபர் தேர்தலில் போட்டியிடுவது தடை செய்யப்படும். அதேநேரத்தில், வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நாளில் இருந்து, ஓராண்டுக்கு குறைவான நாட்களில், இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தால், அந்த நபருக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
அடுத்ததாக, தேர்தலில் போட்டியிடும் ஒருவர், தன் சொத்துக்கள் தொடர்பாக, தவறான தகவல்களைத் தெரிவித்திருந்தால், அவரைத் தகுதி இழக்கச் செய்யவும், வகை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில், போட்டியிடும் பெண் வேட்பாளர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு, அரசே நிதியுதவி அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஒரு குற்றத்திற்காக கோர்ட் ஒன்றால் தண்டிக்கப்பட்ட நபர், மேல் கோர்ட்டால் விடுவிக்கப்படும் வரை, தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என, சட்ட அமைச்சகத்திற்கு பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது. அதையும், சட்டத் திருத்தத்தில் சேர்ப்பது குறித்து, அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. அதேநேரத்தில், தற்போது பதவியில் இருக்கும், எம்.பி.,யோ அல்லது சட்ட சபை உறுப்பினரோ, இதுபோல் கீழ் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு, அவரின் அப்பீல், மேல் கோர்ட்டில் நிலுவையில் இருந்தாலும், அவர்களுக்கு இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, அரசியல் உள்நோக்கத்துடன் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு, எதிராக பாதுகாப்பு அளிக்கவும், சட்டத் திருத்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது என்று, சட்ட அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நமது சிறப்பு நிருபர்