நிலங்களை அளக்க 200 ரோவர் கருவிகள் வாங்க முடிவு
சென்னை:நிலங்களை ஜி.பி.எஸ்., முறையில் துல்லியமாக அளக்க, 200 'ரோவர்' கருவிகள் வாங்க, நில அளவை துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. நிலங்களை அளந்து, எல்லைகளை வரையறை செய்யும் பணிகளை, நில அளவை துறை மேற்கொண்டு வருகிறது. இதில் வகைப்பாட்டுக்கு ஏற்ப நிலங்களை அளந்து, 'சர்வே' எண் ஒதுக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் பாரம்பரிய நடைமுறைகளுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த, நில அளவை துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலத்தின் அளவுகளையும், அது அமைந்துள்ள இடத்தையும் எங்கிருந்து வேண்டுமானாலும் அறிந்து கொள்ள, புதிய வசதிகள் வந்துள்ளன. இதில் குறிப்பாக, அதிக பரப்பளவு நிலங்களை மிக குறுகிய நேரத்தில் அளக்க, 'ரோவர்' கருவிகள் வந்துள்ளன. தமிழகத்தில் 2023ல், 150 ரோவர் கருவிகள் வாங்கப்பட்டன. இந்த கருவிகள் பயன்பாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, மேலும், 200 ரோவர் கருவிகளை வாங்க, நில அளவை துறை முடிவு செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, தலா, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோவர் கருவிகள் கிடைப்பதாகவும், இக்கருவிகளை வழங்குவதற்கான நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், நில அளவை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.