உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை மேயர் கணவருக்கு 15 நாள் சிறை தலைமறைவான 3 பேரை பிடிக்க தீவிரம்

மதுரை மேயர் கணவருக்கு 15 நாள் சிறை தலைமறைவான 3 பேரை பிடிக்க தீவிரம்

திருப்பூர் : நில அபகரிப்பு வழக்கில், மதுரை மேயரின் கணவர் கோபிநாத், 15 நாள் சிறைக் காவலில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்; தலைமறைவாகியுள்ள மூவரை, போலீசார் தேடுகின்றனர். அவிநாசியை அடுத்துள்ள புதுப்பாளையம், முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மகாலிங்கம்,53; சுப்ரமணியம்,55. புதுப்பாளையத்தில் இவர்களுக்குச் சொந்தமான, 55.36 ஏக்கர் நிலத்தை, 2006ம் ஆண்டு விற்க முடிவு செய்தனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த ராமசாமி மகன் ஈஸ்வரன் மற்றும் சுப்ரமணி மகன் குமார் ஆகியோர், ஏக்கர் 8.20 லட்ச ரூபாய் என விலை பேசி, 2006, நவ., 30ல் கிரையம் செய்தனர். முன்பணமாக, 1.30 கோடி ரூபாய் கொடுத்து, மீதிப் பணத்தை மூன்று மாதத்தில் கொடுத்து விடுவதாக, ஒப்பந்தம் செய்தனர். அவகாசம் முடிந்தும், பலமுறை நேரில் சென்று பேசியும், அவர்கள் பணம் தராமல் இழுத்தடித்தனர். இந்நிலையில், மதுரை மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன்,53; அவரது மருமகன் ரமேஷ் மற்றும் மதுரை மாநகர மண்டல தி.மு.க., தலைவரான குருசாமி ஆகியோர், திருப்பூர் வந்தனர்; ஈஸ்வரன் மற்றும் குமாரும் அவர்களுடன் இருந்தனர். திருப்பூரில் உள்ள ஓட்டலில் தங்கிய அவர்கள், மகாலிங்கம் மற்றும் சுப்ரமணியத்தை ஓட்டலுக்கு வரவழைத்து, நில விற்பனை குறித்து கட்டப்பஞ்சாயத்து பேசினர். ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய அவர்கள், 2008, மார்ச் 10ல், ஏக்கரின் மதிப்பு 15 லட்ச ரூபாய் என்ற நிலையில் இருந்தபோது, ஏக்கர் 8 லட்ச ரூபாய் விலையில், மொத்த நிலத்தையும் எழுதி அபகரித்தனர். மகாலிங்கம் மற்றும் சுப்ரமணியத்துக்கு, 5 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதையடுத்து, கோபிநாதன் உட்பட ஐவர் மீது, எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு போலீசார், மதுரை சென்று, கோபிநாதனை கைது செய்து, திருப்பூருக்கு அழைத்து வந்தனர். திருப்பூர் ஜே.எம்., கோர்ட் எண் 1ல் நேற்று ஆஜர்படுத்திய பின், 15 நாள் சிறைக்காவலில், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். குருசாமி, ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ளார்; கோபிநாதனின் மருமகன் ரமேஷ் மற்றும் ஈஸ்வரன், குமார் ஆகிய மூவரும் தலைமறைவாகி உள்ளதால், அவர்களைப் பிடிக்க, போலீஸ் தனிப்படை தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை