உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டியலின மக்களுக்கு அடிப்படை வாழ்வுரிமை கிடைக்குமா? முதல்வர் ஸ்டாலினுக்கு முருகன் ஆவேச கேள்வி

பட்டியலின மக்களுக்கு அடிப்படை வாழ்வுரிமை கிடைக்குமா? முதல்வர் ஸ்டாலினுக்கு முருகன் ஆவேச கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ பட்டியலின மக்களுக்கு அடிப்படை வாழ்வுரிமை கிடைக்குமா? '' என முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1fmmuas0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கடும் கோபம்

இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில், தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குவதாக கூறி தமிழக அரசு சார்பில் ஒரு மாய்மால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்களால் திமுக அரசு தமிழக மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

கள்ளச்சாராயம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவமும், உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படுகொலை

இந்தப் பேரதிர்ச்சி அடங்குவதற்குள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டுக்கு அருகில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஒரு தேசியக்கட்சியின் மாநிலத் தலைவர் கொலையின் மூலம், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரித்து வருவதும் அம்பலமாகியுள்ளது.

கபட நாடகம்

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து வரும் கொடூரத் தாக்குதல், தமிழகத்தை தாண்டி, தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணையை எட்டியுள்ளது. அடுத்தடுத்து நடந்து வரும் இந்த சம்பவங்களால், தமிழக மக்கள், குறிப்பாக பட்டியலின மக்கள் போலி திராவிட மாடல் திமுக அரசின் மீது பெரும்கோபம் கொண்டுள்ளனர். பட்டியலின மக்களின் கோபத்தை தணிக்க ஏதாவது செய்ய முடியுமா என்ற நோக்கில் சில அறிவிப்புகளை திமுக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், அவர்களது அறிவிப்புகள் அனைத்துமே எப்படிப்பட்ட மோசடி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். பட்டியலின மக்களை ஏமாற்றி அவர்களை ஓட்டு இயந்திரமாக பயன்படுத்தும் திமுகவின் கபட நாடகத்தை யாரும் நம்பப்போவதில்லை.

அவலம்

பொது மயானத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை புதைக்கவோ எரியூட்டவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு இவையெல்லாம் தெரியவில்லை என்றால், நானே அவரை அழைத்துச் சென்று இந்த அவலங்களைக் காட்டத் தயாராக இருக்கிறேன்.

சுயதம்பட்டம்

இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பட்டியலின மக்களின் கண்ணீரைத் துடைக்க திராணியற்ற திமுக அரசு, பரிசுத் தொகை உயர்வு, படி உயர்வு என்று கதை அளந்து கொண்டு இருக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையைத்தடுக்க திராணியில்லாமல், கைகட்டி வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாமல் பல இடங்களில் இதனை திமுகவினரே தூண்டி விடும் கொடூரமும் அரங்கேறி வருகிறது. பட்டியலின சமூக மக்களை இந்த நிலையில் வைத்துக் கொண்டு, ஆதிதிராவிட மக்கள் நலன் காப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக திமுக அரசு சுய தம்பட்டம் அடிப்பது அவமானம் இல்லையா?

தகுதி இல்லை

பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத அவலத்தை வைத்துக் கொண்டு, இது தான் திராவிட மாடல் என பெருமை பேசும் துணிவு, மனசாட்சியற்ற திமுகவினருக்கு மட்டுமே இருக்க முடியும். பட்டியலின மக்களுக்கு அடிப்படை வாழ்வுரிமையை கூட தர மறுப்பது தான் போலி திராவிட மாடல் ஆட்சி. இந்த அவலத்தை பெருமையாக வெளியே சொல்ல இந்த அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் முருகன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்புசாமி
ஜூலை 13, 2024 20:41

மத்திய பிரதேச எம்.பி முருகர் இங்கே வந்து ஏன் கூவுறாரு? போய் போபாலில் கூவுங்க.


Narayanan Muthu
ஜூலை 13, 2024 20:32

வடமாநிலங்களில் பேச வேண்டியதை தமிழகத்தில் பேசுகிறார். உங்கள் இதுமாதிரியான சேவையை uttarpradesh madhyapradesh bihar போன்ற மாநிலங்களில் தொடருங்கள். பொம்மை மந்திரி முருகன். இவருக்கு தமிழசையே மேல்.


SUBBU,MADURAI
ஜூலை 13, 2024 18:55

பிரதமர் மோடி மத்திய பாஜக அமைச்சரவையில் எந்த தகுதியும் இல்லாத ஒரு நபருக்கு இணையமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார் என்றால் அது இந்த எல்.முருகனாகத்தான் இருக்கும். ஏற்கனவே இவருக்கு அமைச்சர் பதவியை கொடுத்தும் இவரால் ஒன்றும் சாதிக்க முடியவில்லை என்பது தெரிந்தும் இந்த தடவை ஆக்டிவாக இருக்கும் வேறு யாருக்காவது பதவியை கொடுக்காமல் மீண்டும் ஏன் இவருக்கு பதவியை கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை நம்மை பொறுத்தவரை இவர் அமைச்சர் பதவிக்கு எந்த விதத்திலும் தகுதியில்லாதவர் என்பதுதான்.


Narayanan Muthu
ஜூலை 13, 2024 20:29

well said சுப்பு.


Ms Mahadevan Mahadevan
ஜூலை 13, 2024 17:38

தவறான கருத்து. வட மாநிலங்களை விட தமிழகம் நன்றாக உள்ளது


T.sthivinayagam
ஜூலை 13, 2024 17:23

அதிமேதாவிகள் எழுதி கொடுப்பதை அப்படியே படிக்கும் இரண்டாவது பாஜக தலைவர் என்று மக்கள் கூறுகின்றனர்


தஞ்சை மன்னர்
ஜூலை 13, 2024 16:27

ஆவேசத்துக்கு அறிகுறி இல்லையே


Iniyan
ஜூலை 13, 2024 16:22

அறிக்கை விடுவது தவிர்த்து ஒன்றும் செய்யாமல் மந்திரியாக உள்ளார். இவர்களை போன்றவர்களை வைத்து கொண்டு பாஜக தமிழகத்தில் வளராது.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி