தோராய பட்டாவுக்கு பதில் இ - பட்டா: அமைச்சர் தகவல்
சென்னை:“தோராய பட்டா வழங்கப்பட்டோருக்கு, 'இ - பட்டா' வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - ரவி: அரக்கோணம் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்.அமைச்சர் ராமச்சந்திரன்: அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையம் எதிரே, காலியாக உள்ள இடத்தில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ரவி: தற்போதுள்ள அலுவலகம் அருகில் இடம் உள்ளது; அங்கேயே கட்டித்தர வேண்டும். தனியார் நிலத்தை கையகப்படுத்தி, 'தோராய பட்டா' வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, இ -- பட்டா வழங்க வேண்டும். பல இடங்களில் தோராய பட்டா வழங்கிய நிலத்தை, கிராம கணக்கில் சேர்க்கவில்லை. இதனால், அவர்கள் வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. எனவே, அவர்களுக்கு இ - பட்டா வழங்க வேண்டும்.அமைச்சர்: அனைத்து பகுதிகளிலும் இந்த பிரச்னை உள்ளது. அனைவருக்கும் இ - பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நடப்பாண்டு, 6,000 பேருக்கு இ - பட்டா வழங்கப்பட உள்ளது.தி.மு.க., - வெங்கடாசலம்: அந்தியூர் தாலுகாவுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில், 1,500 விவசாய குடும்பங்களுக்கு நிபந்தனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது வரை நிபந்தனை நீக்கப்படாமல் உள்ளது. இதனால், நிலத்தை பிரித்து பட்டா செய்ய முடியவில்லை. நிபந்தனையை நீக்கி பட்டா வழங்க வேண்டும்.அமைச்சர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., - அசோக்குமார்: கிருஷ்ணகிரி ஒன்றியம் வெல்லம்பள்ளி ஊராட்சியில், வி.ஏ.ஓ., அலுவலகம், குடியிருப்பு கட்டித்தர வேண்டும்.அமைச்சர்: முன்னுரிமை வழங்கப்படும்.தி.மு.க., - அரவிந்த் ரமேஷ்: சோழிங்கநல்லுார் தாலுகா அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. பல அரசு அலுவலகங்களுக்கு கட்டடம் இல்லை. எனவே, ஒருங்கிணைந்த வளாகம் கட்டித் தர வேண்டும்.அமைச்சர்: நிதி நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.