உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  முடங்கியது இ - சேவை இணையதளம்; பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தவிப்பு 

 முடங்கியது இ - சேவை இணையதளம்; பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தவிப்பு 

சென்னை: அரசின் 'இ - சேவை' இணையதளம் முடங்கியதால், அவசர தேவைக்கு அதை பயன்படுத்தும் பொதுமக்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வாயிலாக, 'இ - சேவை' இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, பட்டா மாறுதல், இருப்பிட சான்று, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உட்பட பல வகை சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. வேளாண் பயிர் காப்பீட்டிற்கான பதிவும் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்ய, 30ம் தேதி வரை மத்திய அரசு கால அவகாசம் கொடுத்துள்ளது. எனவே, பயிர் காப்பீடு செய்வதற்காக, இ - சேவை மையங்களுக்கு விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். பல்வேறு அரசு துறைகளில், கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளன. இதற்காக, தொழில் முனைவோர் பலரும், புதிதாக ஒப்பந்ததாரராக பதிவு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். பழைய பதிவுகளை பலரும் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளனர். முதல்வரின் முகவரி துறை இணையதளம் வாயிலாக, கோரிக்கைகளை பதிவு செய்ய, பொதுமக்கள் விரும்புகின்றனர். ஆனால், அரசின் 'இ - சேவை' இணையதள சர்வர் அவ்வப்போது செயல்படாமல் முடங்குகிறது. இதனால், இ - சேவை மையங்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தலைமை செயலகம், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள, இ - சேவை' மையங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இப்பிரச்னை சரியாக ஒரு வாரம் ஆகும் என, அங்குள்ள ஊழியர்கள் கூறி வருகின்றனர். சர்வர் பிரச்னை காரணமாக, குறித்த காலத்திற்குள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்படுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, அரசு உடனடியாக இ - சேவை மையங்கள் முறையாக செயல்பட, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்