கோவை:தமிழக அளவில் அதிக வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்த வகையில், கோவை லோக்சபா தொகுதி மூன்றாமிடம் பெற்றுள்ளது. ஆனாலும், இரட்டை பதிவு, இடப்பெயர்ச்சி மற்றும் இறந்தவர்கள் பெயர் நீக்கம் செய்யாதது உள்ளிட்ட, பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், செயலர் அந்தஸ்தில் சிறப்பு அதிகாரி நியமித்து, பட்டியலை சரிபார்க்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.தமிழகத்தில், 19ம் தேதி லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. பதிவான ஓட்டுகளை தேர்தல் ஆணைய செயலியில் பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியால், சதவீதம் வெளியிட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக வெளியிட்ட பட்டிலின்படி, 69.72 சதவீதம் ஓட்டுப்பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இதில், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில், 14 லட்சத்து, 35 ஆயிரத்து, 243 ஓட்டுகள் பதிவாகி, மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல், 14 லட்சத்து, 30 ஆயிரத்து, 738 ஓட்டுகள் பதிவாகி, திருவள்ளூர் தொகுதி இரண்டாமிடம், 13 லட்சத்து, 66 ஆயிரத்து, 597 ஓட்டுகள் பதிவாகி, கோவை தொகுதி மூன்றாமிடம் பெற்றிருக்கிறது. வாக்காளர்கள் அதிகம்
மாநில அளவில் ஸ்ரீபெரும்புதுார், கோவை, திருவள்ளூர் மற்றும் தென்சென்னை ஆகிய தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை, 20 லட்சத்தை கடந்திருக்கிறது. ஸ்ரீபெரும்புதுாரில் மட்டும், 23 லட்சத்து, 82 ஆயிரத்து 119 வாக்காளர்கள் இருக்கின்றனர்.கோவையில், 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 124 வாக்காளர்கள் உள்ளனர். அதேநேரம், ஓட்டுப்பதிவில் மற்ற தொகுதிகளை காட்டிலும், அதிகமானோர் இத்தொகுதிகளில், ஓட்டளித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.பட்டியலில் ஒரே வாக்காளருக்கு இரு இடங்களில் ஓட்டுரிமை இருப்பது; இடப்பெயர்ச்சி அடைந்திருப்பது; இறந்தவர்கள் பெயர்களை நீக்காமல் இருப்பது போன்ற காரணங்களால், எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி, 100 சதவீதம் தவறில்லாத பட்டியல் தயாரித்தால், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறையும். வாக்காளர்களே இல்லை
ஏனெனில், தேர்தல் ஆணையம் இறுதி பட்டியல் வெளியிட்ட பின், கோவையில் அரசியல் கட்சியினர், பூத் வாரியாக சென்று வாக்காளர்கள் விபரத்தை சரிபார்த்தபோது, ஒரு பூத்தில், 1,000 வாக்காளர்கள் இருப்பதாக, பட்டியலில் பெயர்கள் இருந்தன; தேர்தல் பிரசாரத்துக்கு வீடு வீடாக சென்றபோது, அப்பகுதியில், 600 வாக்காளர்களே இருந்தது கண்டறியப்பட்டது.மீதமுள்ள, 400 வாக்காளர்களின் நிலை தெரியவில்லை. தேர்தல் பிரிவினர் கள ஆய்வு செய்யாமல், பட்டியல் தயாரித்திருப்பது, இதன் மூலம் தெரியவந்துள்ளது.உதாரணத்துக்கு, கோவை வடக்கு தொகுதியில், 230 ரங்கநாதர் வீதியில், 368 வாக்காளர்கள் இருப்பதாக, பட்டியலில் இருக்கிறது. அவ்வீதியில், தற்சமயம், 73 வாக்காளர்களே வசிக்கின்றனர். 68 வாக்காளர்கள், இரு கி.மீ., சுற்றளவுக்கு உள்ள வீடுகளுக்கு பெயர்ச்சி அடைந்திருக்கின்றனர். 33 வாக்காளர்கள் இறந்து விட்டனர்.4 வாக்காளர்களின் பெயர்கள் இரட்டை பதிவாக இருந்தது. 190 வாக்காளர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதுதொடர்பாக, தேர்தல் பிரிவில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அலுவலர்கள் நேரடியாக வீடு வீடாக ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்காததே இதுபோன்ற தவறுகளுக்கு காரணம். சிறப்பு அதிகாரி அவசியம்
இம்முறை நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தீவிரமாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட தேர்தல் ஆணையம், 100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க தவறி விட்டது என்பதே உண்மை. இதற்கு தீர்வு காண, செயலர் அந்தஸ்தில் சிறப்பு அதிகாரி நியமித்து, விசாரணை செய்ய வேண்டும்.ஓட்டு சேகரிக்கச் சென்ற இடங்கள் மற்றும் ஓட்டுப்பதிவு குழப்பங்களை அனுபவப்பூர்வமாக பெறும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை பெற வேண்டும். மூன்று அல்லது ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்து, பூத் வாரியாக மீண்டும் வாக்காளர்கள் விபரங்களை கள ஆய்வுக்கு உட்படுத்தி, இறுதி பட்டியல் தயாரிக்க வேண்டும்.அப்பட்டியல் நகலை கட்சியினருக்கு வழங்கி, அவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும். ஆதார் எண்ணை இணைத்து, ஒரு வாக்காளருக்கு ஓரிடத்தில் மட்டுமே ஓட்டுரிமை என்பதை, இறுதி செய்ய வேண்டும்.பரீட்சார்த்த முறையில், 20 லட்சத்துக்கு மேல் அதிக வாக்காளர்கள் உள்ள ஸ்ரீபெரும்புதுார், கோவை, திருவள்ளூர் மற்றும் தென்சென்னை ஆகிய தொகுதிகளில் பட்டியல் சரிபார்ப்பு பணி மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.இல்லையெனில், 2026 சட்டசபை தேர்தலிலும் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது; 100 சதவீத ஓட்டுப்பதிவு என்கிற, தேர்தல் ஆணையத்தின் பிரசாரம் வெற்றுக் கோஷமாகவே ஒலித்துக் கொண்டிருக்கும்.