உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரிசீலிக்கப்படாத ஓய்வூதிய விண்ணப்பங்கள்; 2 ஆண்டாக காத்திருக்கும் மாஜி பூசாரிகள்

பரிசீலிக்கப்படாத ஓய்வூதிய விண்ணப்பங்கள்; 2 ஆண்டாக காத்திருக்கும் மாஜி பூசாரிகள்

கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் பல்லடம் வாசு கூறியதாவது:

தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை நடைபெறும், 19,000 கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு துறை ரீதியான ஓய்வூதியம், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் . அதேபோல, துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற, 1,000க்கும் அதிகமான பூசாரிகள் ஓய்வூதியத்துக்காக விண்ணப்பித்து, அனுமதி கிடைக்காமல் இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். பொதுவாக, ஓய்வூதிய விண்ணப்பங்களை, 30 நாளில் பரிசீலித்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவி ஆணையர் அலுவலகங்களில் பெறப்படும் விண்ணப்பங்களை, சென்னை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பினால் தான், அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு உரிய காலத்தில் ஓய்வூதியம் கிடைக்கும். எனவே, ஹிந்து அறநிலையத் துறை, மூன்று மாதத்துக்கு ஒரு முறை, தேர்வுக்குழு கூட்டம் நடத்தி, முன்னாள் பூசாரிகளின் ஓய்வூதிய விண்ணப்பங்களை பரிசீலித்து, ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை