உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வூதியதாரர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்

ஓய்வூதியதாரர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்

சென்னை:தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் வாயிலாக, மாதந்தோறும் வழங்கப்படும் தொகை உயர்த்தப்பட்டு இருப்பதாக, மர்ம நபர்கள் பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி, பண மோசடிக்கு முயற்சி செய்வதாக, போலீசில் மூத்த குடிமக்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராமன், 64, கூறியதாவது:மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் கீழ் செயல்படும், இ.பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதியில், 'தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995' அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் வாயிலாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும், 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை 9,000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகிறோம். சமீபத்தில், எங்கள் மொபைல் எண்களில், மர்ம நபர்கள் 'வாட்ஸாப்' வழியே, மாதந்தோறும் தரப்படும் ஓய்வூதியத் தொகை, 8,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என, பிரதமர் மோடியின் படத்துடன் தகவல்கள் அனுப்பி உள்ளனர். மேலும், அந்த தொகையை பெற்றுத்தர, 10,000 ரூபாய் செலுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளனர். அதில் பழைய ஓய்வூதியம், உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் எவ்வளவு என குறிப்பிடப்பட்டுள்ளது. 'வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் கேட்டபோது, அப்படி எந்த தொகையும் உயர்த்தப்படவில்லை' என தெரிவித்தனர். உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் பெற ஆசைப்பட்டு, தகவல் அனுப்பியவர்களை தொடர்பு கொண்டால், அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பணம் பறிக்கின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை