சென்னை : ''தமிழகத்தில் 60 ஆயிரம் இலவச கறவை மாடுகள், 28 லட்சம் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் 30 சதவீதம் பயனாளிகளாக, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருப்பர்,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில், பட்ஜெட் விவாதத்தின் போது, சட்டசபை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஆறுமுகம் பேசியதாவது: பட்ஜெட்டில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது. அரசு கேபிள் 'டிவி' திட்டம் கொண்டு வந்ததன் மூலம், தனியார் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மின்சார பற்றாக்குறையை போக்குவதற்கு, அரசு எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. மின் திருட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்து, மின் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆறுமுகம்: இந்தியாவிலேயே இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து விட்டு வெளியேறும் மாணவர்கள், தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக, வெளிநாட்டில் வேலை வாங்கித் தரக்கூடிய திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். வால்பாறை தொகுதியைச் சேர்ந்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை எழுதுவதற்கு, மலையிலிருந்து கீழே வருவதற்குள் பல்வேறு பிரச்னையால், குறித்த நேரத்திற்குள் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, வால்பாறையில் தேர்வு மையம் அமைக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா: ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவது தான் இந்த கார்ப்பரேஷன் பணி. அது, மேலும் விரிவுபடுத்தப்படும்.வால்பாறையில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மையம் அமைக்கப்படும்.
ஆறுமுகம்: மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையை முதல்வர் கொண்டு வந்தார். ஆனால், தி.மு.க., ஆட்சியில் குதிரை பேரம் நடத்துவதற்காக, அந்த முறை மாற்றி அமைக்கப்பட்டது.
கோவை மாநகராட்சியின் ஒரு வார்டில், 32 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. மற்றொரு வார்டில் 4,500 ஓட்டுகள் உள்ளன. சமமான முறையில் வாக்காளர்களை பிரிக்கவில்லை. ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் உரிய முறையில் சேருகிறதா என கண்டறிய, கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா: 60 ஆயிரம் இலவச கறவை மாடுகள், 28 லட்சம் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் 30 சதவீதம் பயனாளிகளாக, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருப்பர். இவ்வாறு விவாதம் நடந்தது.