உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  1.30 லட்சம் சதுர கி.மீ., நிலத்துக்கு செயற்கைக்கோள் வரைபடம் தனியாரிடம் வாங்குகிறது அரசு

 1.30 லட்சம் சதுர கி.மீ., நிலத்துக்கு செயற்கைக்கோள் வரைபடம் தனியாரிடம் வாங்குகிறது அரசு

சென்னை: தமிழகத்தில் 1.30 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு நிலங்களுக்கான செயற்கைக்கோள் தரவுகள் அடிப்படையிலான துல்லிய படங்களை, தனியாரிடம் இருந்து வாங்க நில அளவை துறை முடிவு செய்துள்ளது. மாவட்டம், தாலுகா, பிர்கா, கிராமம் என நிலங்கள் பிரிக்கப்பட்டு, அதற்கான வரைபடங்கள் நில அளவை துறை வாயிலாக தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றில், கிராம வரைபடத்தில் தான், ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் உட்பட்ட நிலத்தின் பரப்பளவு, அமைவிட விபரங்கள் கிடைக்கும். பொது மக்கள் பயன்பாட்டுக்காக, இந்த வரைபடங்களை, 'ஆன்லைன்' முறையில் நில அளவை துறை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், சர்வே எண் வாரியாக நிலங்களின் அமைவிடம், பட்டா உள்ளிட்ட விபரங்களை, பொது மக்கள் எளிதாக அறிய, 'தமிழ் நிலம் ஜியோ' என்ற பெயரில் மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலியில், நிலங்களின் தற்போதைய விபரங்களை துல்லியமாக அறிவதில் பிரச்னை இருப்பதாக புகார் எழுந்தது. இதை சரி செய்வது குறித்து, வருவாய் துறை மற்றும் நில அளவை துறை அதிகாரிகளின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், நிலங்களுக்கான துல்லியமான செயற்கைக்கோள் வரைபடங்களை வாங்கி, தகவல் தொகுப்பில் சேர்க்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணியை நில அளவை துறை துவக்கி உள்ளது. இது குறித்து, நில அளவை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், ஜி.பி.எஸ்., எனப்படும் புவியிட தகவல் தொகுப்பு அடிப்படையில் நிலம் அளக்கப்படுகிறது. இதில் நிலங்களின் எல்லைகள், அட்ச ரேகை, தீர்க்க ரேகை அடிப்படையிலும், பரப்பளவு அடிப்படையிலும் தொகுக்கப்படுகின்றன. அத்துடன், நிலங்களின் தற்போதைய தோற்றத்தை மிக துல்லியமாக அறிய, செயற்கைக்கோள் படங்களை வாங்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக, 1.30 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு நிலங்கள் தொடர்பான துல்லிய படங்கள் வாங்கப்பட உள்ளன. இந்த படங்களின் புள்ளி விபரங்களை, 30 செ.மீ., வரை விரிவாக்கம் செய்து பார்க்கும் அளவுக்கு துல்லியமாக இருக்கும். தனியார் நிறுவனங்களிடம் இருந்து இந்த படங்கள் வாங்கப்படும். இதற்கான நிறுவனங்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த வரைபடங்கள் வாங்கிய பின், நிலங்களின் துல்லியமான விபரங்களை பொது மக்களும், அரசு துறைகளும் எளிதாக அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை