உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தரமான கல்வி இல்லை ஆதங்கப்படுகிறார் கவர்னர் ரவி

தமிழகத்தில் தரமான கல்வி இல்லை ஆதங்கப்படுகிறார் கவர்னர் ரவி

சென்னை:'சுதந்திரம் அடைந்து, 78 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் பட்டியலினத்தவர் கொல்லப்படுவது அவமானகரமானது' என, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, தமிழக கவர்னர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், இந்தியா கொடுத்த பதிலடியில், அந்நாட்டின் விமான தளங்கள் உட்பட முக்கியமான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இது பாகிஸ்தானை அவசர போர் நிறுத்தத்துக்கு மன்றாட வைத்தது. இந்தியாவின் இந்த வெற்றி, உலக ராணுவ வரலாற்றில் நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். மத்திய அரசு ஆதரவு பொருளாதார வளர்ச்சியில் பல, ஆண்டுகளாக, இந்தியாவின் ஆறு தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. இதற்கு ரயில் பாதைகள், சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், டிஜிட்டல் துறை ஆகியவை கணிசமான பங்களிக்கின்றன. தமிழகத்தின் சுகாதாரம், கல்வித் துறை கட்டமைப்புகள், மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் வகையில் உள்ளன. சாத்தியமான அனைத்து வழிகளிலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு ஆதரவளித்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழக்கமான வரிப்பகிர்வு தவிர, 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மானியங்களாக வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரயில் பாதைகள், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டும், மேம்படுத்தப்பட்டும் வருகின்றன. 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளின் கல்விச்சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது. 50 சதவீதத்திற்கும் அதிகமான உயர் நிலை பள்ளி மாணவர்களால், இரண்டு இலக்க கூட்டல், கழித்தல் கணக்குகளைக்கூட செய்ய முடியவில்லை. சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும், மற்றவர்களுக்குமான கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. தரமான கல்வி இல்லாத நிலையில், அவர்களால் ஒருபோதும் சமூக மற்றும் பொருளாதார பாகுபாடுகளைக் கடந்து, கண்ணியத்துடன் வாழ முடியாது. சமூக மற்றும் பொருளாதார பாகுபாட்டுடன் வாழ்வதே, அவர்களின் தலைவிதியாக மாறி வருகிறது; இதை சரிசெய்ய வேண்டும். கிராமங்களிலும், பள்ளிகளிலும் பட்டியலினத்தவர்களையும், மற்றவர்களையும் பிரிக்கும் சுவர்கள் கட்டப்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றன. பொதுப் பாதையை பயன்படுத்த முற்படும்போது, பட்டியலினத்தவர் கொல்லப்படுகின்றனர். சமூக பாகுபாட்டுக்கு எதிராக, மாணவர்கள், இளைஞர்கள் சபதமேற்க வேண்டும். தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக, தமிழகத்தில் அதிகம் தற்கொலைகள் நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். அதிகார ஆசி இளைஞர்களிடம் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன், சக்தி படைத்தவர்கள் பின்னணியில் இருப்பதால், போதைப் பொருள் வினியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது. தமிழகத்தின் எதிர்காலத்தை அழிப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் பிற பாலியல் குற்றங்கள், 33 சதவீதம் அதிகரித்துள்ளன. இதனால், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நாம் என்ன செய்தாலும், அதில் தேசத்தின் நலனே பிரதானமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 'பிரிவினை கொடுமைகளை பேச வேண்டும்' 'பிரிவினை கொடுமைகள்' நினைவு தினம் நிகழ்ச்சி, சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், கவர்னர் ரவி பேசியதாவது: பிரிவினை ஏற்பட, ஆங்கிலேயர்கள் காரணம் என சொல்வோம். ஆனால், சுதந்திரம் பெறும்போது, பிரிவினைகளை ஏற்படுத்தியதே மக்கள்தான். அப்போதிருந்த சிலர், அதாவது சில முஸ்லிம்கள், மற்றவர்களுடன் இணைந்து வாழ மறுத்து விட்டனர். பிரிவினை என்பது 5,000 ஆண்டுகளாக, இந்த மண்ணில் நிகழவில்லை. நம் பாரதத்தின் கொள்கையே, 'நாம் அனைவரும் ஒரே குடும்பம்' என்பதுதான். உலகிற்கும் அதையே பாரதம் கற்றுக் கொடுத்தது. பிரிவினைக்கு பின், கிழக்கு பாகிஸ்தானில், முஸ்லிம்கள் அல்லாதோர் எண்ணிக்கை 33 சதவீதமாக இருந்தது. தற்போது 8 சதவீதமாக குறைந்துள்ளது. ஏராளமானோர் மதம் மாற்றப்பட்டனர். பலர், அங்கிருந்து தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அங்கிருந்து வரும் சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்கும் சட்டத்தை, பிரதமர் மோடி செயல் படுத்தி இருக்கிறார். தற்போது, பிரிவினை எல்லாம் முடிந்துவிட்டது என, நினைக்க வேண்டாம். இன்றும், ஜம்மு - காஷ்மீர், கிழக்கு இந்திய பகுதிகளில் பிரிவினை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M S RAGHUNATHAN
ஆக 15, 2025 21:58

அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம் இந்த ஆள் தூங்க விடமாட்டேங்கிறான்.


Sridhar
ஆக 15, 2025 15:21

இதையெல்லாம் எடுத்து சொல்வதற்கு ஒரு ஆள் இருக்கிறார் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், உங்கள் கண் முன்னே இந்த அரசு ஊழல்கள் பலவற்றை செய்து மக்களை பணத்தை கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறது, அதையும் நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த திருட்டு கும்பலின் ஆட்சி வந்த பிறகு ஏன் இன்னும் ஒரு CAG தணிக்கை அறிக்கைகூட வெளிவரவில்லை. ட்ரான்ஸபார்மரில் ஆரம்பித்து எல்லா அரசு கொள்முதல்களிலும் பெரும் கொள்ளை அடிக்கிறார்கள். அதனால் அரசு செலவீனங்கள் அதிகரித்து தமிழகத்தின் கடன் சுமையும் வானளவு அதிகரித்துவிட்டது. அரசு செலவுகள் அதிகமானது மற்றும் கருப்புப்பண புழக்கத்தால் நிலம் வீடு மதிப்பு அதிகரிப்பு, ஆடம்பர கார்கள் வாட்சுகள் விற்பனை அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட பொருளாதார கணக்கீட்டில் எதோ மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி என்பதுபோல் காண்பிக்கப்பட்டு மக்களை ஏமாற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள். இவர்களே அறியாமல் 2010-11 லிலும் திருட்டு கும்பல் ஆட்சியில் இதுபோன்று வளர்ச்சி காணப்பட்டது என்று வேறு சொல்லியிருக்கிறார்கள் அந்த ஆண்டுதான் தமிழகம் மின்சாரமே இல்லாமல் மிகக்கடுமையான இன்னல்களுக்கு ஆளான வருஷம் என்பதை மறந்துவிட்டார்கள் போலும் இவற்றையெல்லாம் வெளிகொண்டுவந்து மக்களுக்கு உண்மை நிலவரத்தை தெரிவிக்கவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறதே, அதை ஏன் செய்யவில்லை?


venugopal s
ஆக 15, 2025 11:37

தமிழகத்துக்கு தரமான ஆளுநர் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் எங்களுக்கும் இருக்கிறது, என்ன செய்வது ? எல்லாம் தலையெழுத்து!


xyzabc
ஆக 15, 2025 11:23

திராவிட கல்வியை பெருமையுடன் மார் தட்டிக்கொண்டு இருக்கிறார்கள். கஷ்டம் தான் அய்யா. சொன்னது சரியே.


Chess Player
ஆக 15, 2025 09:29

ஆளுநரின் கருத்து 100% சரியானது. நாடு முழுவதிலுமிருந்து வந்த வேட்பாளர்களை நாங்கள் நேர்காணல் செய்தபோது, தமிழக வேட்பாளர்கள் அறிவு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் பரிதாபகரமான பற்றாக்குறையை சந்தித்தனர். வேட்பாளர்கள் உண்மையிலேயே சிறந்தவர்கள், ஆனால் அவர்களுக்குப் போதுமான கல்வி மற்றும் பயிற்சி மற்றும் அவர்களின் படிப்பின் போது திறன் வழங்கப்படவில்லை. இதே போக்கு தொடர்ந்தால், தனியார் துறையில் யாரும் வேலை செய்ய மாட்டார்கள். அரசாங்கம் உடனடியாக அவர்களை தங்கள் துறைகளில் சேர்த்துக்கொள்ளும், இது திறமையின்மைக்கு வழிவகுக்கும்.


Ram
ஆக 15, 2025 06:49

அய்யா நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி, அதுபோல் மத்திய பல்கலைகளுக்கும் rss தொடர்புள்ள பேராசிரியகளை vc மற்றும் டைரக்டர் ஆக நியமிப்பது சரியா , தரம் பாதிக்காதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை