உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு தொடர்கிறது

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு தொடர்கிறது

போலி ஆவணங்கள் மூலம், நில அபகரிப்பு, தொடர்கதையாகி வருகிறது.விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் காசிகனி, 62. இவருக்கு சொந்தமான, பந்தல் குடி மன்னாக்கோட்டை பகுதியில் இருந்த, 3.5 ஏக்கர் நிலத்தை, புதுக்கோட்டை வெள்ளைச்சாமி, பொம்மையாபுரம் பாம்புலி நாயக்கர், சூலக்கரை கோபால், சாத்தூர் ஆனந்த ராஜாமணி, சென்னையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, மணிவண்ணன், லீலாதேவி உட்பட, எட்டுக்கும் மேற்பட்டோர், போலி ஆவணம் தயாரித்து அபகரித்து கொண்டனர்.இது தொடர்பாக, விருதுநகர் நில அபகரிப்பு தனிப் பிரிவில் அளித்த புகார் படி, பாம்புலி நாயக்கர், கோபால், ஆனந்தராஜாமணி ஆகிய மூவரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர்.கோவை, சரவணம்பட்டி, கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் பூவாத்தாள். இவருக்கு சொந்தமான, 2.46 ஏக்கர் நிலத்தை, 2000ல், 'ராகவி கார்டன்' எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம், விலைக்கு வாங்கியது.அதே ஆண்டில், இந்நிலம், 37 சைட்களாக பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது. வீட்டுமனைகளை வாங்கிய, 10 பேர், வீடு கட்டி வசிக்கின்றனர். இச்சூழலில், 2008ல் இதே பகுதியைச் சேர்ந்த சாந்தலிங்கம் என்பவர், சம்பந்தப்பட்ட நிலம் என் மூதாதையருக்கு சொந்தமானது. தற்போதும் அந்நிலத்தில் விவசாயம் செய்து வருவதாக, வருவாய்த் துறையிடம் கூறி, 'விவசாய பூமி' என சான்றிதழ் பெற்றார்.பின், 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, கோவை மாநகர மாவட்ட தி.மு.க., செயலர் வீரகோபாலுக்கு விற்பனை செய்தார். சமீபத்தில், வீரகோபாலின் ஆட்கள், ராகவி கார்டனுக்கு சென்று, அங்கு குடியிருப்பவர்களை காலி செய்யும் படி மிரட்டல் விடுத்தனர்.இது தொடர்பாக, அங்கு வீடு கட்டி வசிக்கும் சற்குணம் என்பவரின் மனைவி தனலட்சுமி, கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, போலி ஆவணம் தயாரித்து, 2.46 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்த சாந்தலிங்கம் மற்றும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி நகராட்சி சார்பில், பல இடங்களில் பூங்காக்கள் அமைக்க, இடம் ஒதுக்கப்பட்டது. பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட சில இடத்தை, சத்துவாச்சாரி நகராட்சி தி.மு.க., தலைவர் ஜெயலட்சுமி, அவருடைய கணவர், வேலூர் ஒன்றிய தி.மு.க., செயலர் ஏழுமலை, ஓய்வு பெற்ற சத்துவாச்சாரி நகராட்சி செயல் அலுவலர் சண்முகம், மற்றொரு ஏழுமலை ஆகியோர், முறைகேடாக விற்பனை செய்ததாக, நகர, அ.தி.மு.க., துணைச் செயலர் ரமேஷ், வேலூர் நில அபகரிப்பு மீட்புக் குழுவிடம், நேற்று புகார் செய்தார்.விசாரணை நடத்தியதில், பூங்கா இடத்தை, 21 பேருக்கு பட்டா போட்டு விற்பனை செய்தது தெரிந்து, நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.சத்துவாச்சாரி நகராட்சி அலுவலகத்தில் விசாரித்த போது, சத்துவாச்சாரி நகராட்சி கவுன்சிலர்களை திருப்திபடுத்த, பூங்கா நிலத்தை, 2,400 சதுர அடிவரை பிளாட் போட்டு வழங்கப்பட்டுள்ளது.தி.மு.க.,- ம.தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் என, 17 பேர், அந்த இடத்தை பெற்று, தங்கள் பெயருக்கு பதிவு செய்து கொண்டனர். நான்கு கவுன்சிலர்கள் மட்டும், இடத்தை பெற்றால் பிரச்னை வரும் என்பதால், நிலத்துக்குரிய பணத்தை பெற்றுக் கொண்டனர்.பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு, ஒரு சதுர அடி, 1,000 ரூபாய் வரை விலை போகிறது. அ.தி.மு.க., கவுன்சிலர்களில் ஏழு பேர், பூங்கா இடத்தை தங்கள் பெயரில் பதிவு செய்துள்ளனர்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அ.தி.மு.க., வைச் சேர்ந்த சிலர், பூங்கா இடத்தை பெற்றவர் விவரத்தை அறிந்து, வேலூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில், பத்திர நகல்களை பெற்று, அ.தி.மு.க., மேலிடத்திற்கு அனுப்பி விட்டனர். விசாரணை நடந்து வரும் நிலையில், பூங்கா இடங்களை பெற்ற கவுன்சிலர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தெரிவித்தனர்.- நிருபர் குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ