| ADDED : டிச 03, 2025 07:35 AM
மதுரை: சிறைகளில் கைதிகள் மீது குற்றச்சாட்டு எழும்போது விசாரித்து, தண்டனை விதிப்பதை முறைப்படுத்த சுற்றறிக்கை வெளியிட்டதற்காக சிறைத்துறை நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு தெரிவித்தது. கோவை தனலட்சுமி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக எனது கணவர் துரைப்பாண்டி உள்ளார். அவரை தனிமை சிறையில் அடைத்துள்ளனர். அவருக்கு மருத்துவ சிகிச்சை, சட்ட உதவி வழங்க வேண்டும். அவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே விசாரணையின்போது அரசு தரப்பு: துரைப்பாண்டி மற்றும் மற்றொரு கைதி கதிரேசன் ஒரே நேரத்தில் அங்குள்ள டெலிபோன் பூத்திலிருந்து மூன்றாம் நபருடன் பேசினார். இது சிறை விதிகளுக்கு எதிரானது. துரைப்பாண்டியை தனிமை சிறையில் அடைக்கவில்லை. மற்றொரு பிரிவிலுள்ள பிற கைதிகளுடன் உள்ளார். கதிரேசன் வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டார். இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் அமர்வு பிறப்பித்த உத்தரவு: கைதிகள் மீது குற்றச்சாட்டு எழும் போது விசாரிக்கும் முறை, தண்டனைகளை முறைப்படுத்த தமிழக சிறைத்துறை டி.ஜி.பி.,அலுவலகம் அனைத்து சிறைகளுக்கும் வெளியிட்ட சுற்றறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில்,'கைதி ஏதேனும் தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால், அதை அவருக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். கைதியின் வாக்குமூலம் நகல், தண்டனை பதிவு நகலை வழங்க வேண்டும். இது கைதி மேல்முறையீடு செய்ய ஏதுவாக இருக்கும், 'என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கைதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும். சுற்றறிக்கை வெளியிட்டதற்காக சிறைத்துறை டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் மற்றும் நீதிமன்றத்திற்கு உதவி செய்து, ஆலோசனை வழங்கியதற்காக மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி., முருகேசனை பாராட்டுகிறோம். வழக்கு முடிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.