| ADDED : டிச 04, 2025 06:27 PM
இன்று இரவு 7 மணிக்குள் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை போலீஸ் கமிஷனர் பாதுகாப்பு வழங்குமாறு ஐகோர்ட்டின் மதுரை கிளை மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்த மறுத்ததால், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உள்ளூர் முஸ்லிம்களே ஆட்சேபம் எழுப்பாத நிலையில், தமிழக அரசு இந்த விஷயத்தில் பிடிவாதம் காட்டுவது இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மக்கள் மத்தியிலும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. சிறுபான்மை ஓட்டுகள் கையை விட்டு போய்விடுமோ என்ற பயத்தில் திமுக அரசு எடுத்துள்ள தவறான அணுகுமுறையால், இதுவரை பாரதிய ஜனதாவை ஆதரிக்காமல் தவிர்த்த இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும்; அதனால் கட்சிக்கு பெரும் பாதிப்பு உண்டாகும் என திமுக சீனியர் நிர்வாகிகள் கவலைப்படுகின்றனர்.“யாருடைய தவறான ஆலோசனையை கேட்டு முதல்வர் இப்படி செய்கிறார் என்று எங்களுக்கு தெரியவில்லை. பாரதிய ஜனதா மீதான கோபத்தால், ஒட்டு மொத்த இந்துக்கள் ஆதரவையும் இழந்து விடக்கூடாது என்பதை யார் எடுத்துச் சொல்வது என்று புரியவில்லை” என ஒரு தலைவர் ஆதங்கப்பட்டார். கோர்ட்டின் இன்றைய உத்தரவை நிறைவேற்றுவதன் மூலம், பெரும் இழப்பை ஸ்டாலின் தவிர்க்கலாம் என மூத்த அதிகாரிகள் கருதுகின்றனர்.