அ.தி.மு.க., இலக்கிய அணி செயலர் வைகைச்செல்வன் பேச்சு:
தி.மு.க., தேர்தல் அறிக்கை காகிதம் போன்றது; அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை ஆயுதம் போன்றது. தேர்தல் போரில் வெல்வது ஆயுதம். தி.மு.க., பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை நகல் என, முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். நகல் எடுக்கும் வேலை அ.தி.மு.க.,விடம் இல்லை. முதல்வர் தான், பிரசார மேடையில் பேசும் போது எழுதி கொடுத்ததை நகல் எடுத்து பேசுகிறார்.
தேர்தல் முடிவுகள் வந்ததுக்கு அப்புறம், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை போர் ஆயுதம்னு இவர் சொல்றாரான்னு பார்க்கலாம்!
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு:
தற்போது, 1.15 கோடி பெண்கள், மாதம் 1,000 ரூபாய், மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். தேர்தல் முடிந்ததும், தகுதி இருந்தும் உரிமைத் தொகை கிடைக்காத பெண்களிடம் விண்ணப்பம் பெற்று, உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலுக்கு இரண்டாண்டு அவகாசம் இருப்ப தால், அமைச்சர் சொல்றதெல்லாம், 'அல்வா' கொடுக்கிற வேலை!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'ஜாதிக்கொரு சுடுகாடு என்றில்லாமல், ஒரே நாடு; ஒரே சுடுகாடு என்ற நிலையை உருவாக்க பா.ஜ., அரசு முன் வருமா?' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கேட்டுள்ளார். ஏன், இந்த கேள்வியை தி.மு.க.,விடம் கேட்க மாட்டீர்களா; பயமா? சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு, இடுகாடு பயன்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டதே, அதை அமல்படுத்த திராவிட மாடல் அரசை வலியுறுத்த தயக்கம் ஏன்?
ஆளுங்கட்சியை எதிர்த்து கேள்வி கேட்டா, மறுபடியும் எம்.பி.,யாகி அவர் எப்படி டில்லிக்கு போக முடியும்?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழகத்தில் கல்லுாரி பேராசிரியர் பணிக்கான, 'தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு' எழுதுவதற்கான விண்ணப்ப கட்டணம், பொதுப்பிரிவினருக்கு, 1,500 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, 1,250ல் இருந்து, 2,000 ரூபாயாகவும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 500ல் இருந்து 800 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது கடும்கண்டனத்திற்குரியது.
கல்லுாரி மாணவியருக்கு மாதா மாதம், 1,000 ரூபாய் கொடுக்குறாங்களே... அதை எல்லாம் எப்படித்தான் திரும்ப வசூல் பண்றதாம்?