சென்னை:சொத்து தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும், 'எக்ஸ்பார்ட்டி' உத்தரவுகளை, பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கும், ஐ.ஜி., சுற்றறிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த வசந்தகுமாரி என்பவர் தாக்கல் செய்த மனு:உதகையில், என் கணவரின் தாத்தா நல்லுசாமி நாயுடுவுக்கு, 5 சென்ட் நிலம் இருந்தது. அதை, என் கணவர் பெயருக்கு உயில் எழுதி வைத்தார். என் கணவர், 1993ல் இறந்தார். உயிலை மறைத்து, அந்த சொத்தை, வேறு ஒருவருக்கு என் மாமனார் விற்று விட்டார். தள்ளுபடி
இது தெரிந்ததும், நில விற்பனை செல்லாது எனக் கோரி, உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எதிர்தரப்பில் ஆஜராகாததால், எக்ஸ்பார்ட்டி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி, எதிர்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது. எக்ஸ்பார்ட்டி உத்தரவை பதிவு செய்யக் கோரி, உதகை இணை சார் - பதிவாளரிடம் விண்ணப்பித்தேன். கடந்த ஆண்டு பிப்ரவரியில் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையின்படி, எக்ஸ்பார்ட்டி உத்தரவை பதிவு செய்ய தடை இருப்பதாக கூறி, பதிவு செய்ய மறுத்தார். எனவே, நீதிமன்ற உத்தரவை பதிவு செய்ய, பதிவுத்துறை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சி.மணிபாரதி, ''எக்ஸ்பார்ட்டி உத்தரவு இறுதியாகி விட்டதால், அதைப் பதிவு செய்ய சட்டத்தில் தடையில்லை,'' என்றார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சட்டம், விதிகளை மீறும் வகையில், எந்த சுற்றறிக்கையும் இருக்க முடியாது. எனவே, பத்திரப்பதிவு ஐ.ஜி., பிறப்பித்த சுற்றறிக்கையின்படி, எக்ஸ்பார்ட்டி உத்தரவை பதிவு செய்யவில்லை என்று இணை சார் - பதிவாளர் கூறிய காரணம், சட்டத்துக்கு எதிரானது.சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என்றாலும், இதைச் சுட்டிக்காட்டி, பல வழக்குகள் விசாரணைக்கு வருவதை பார்க்கிறேன். எக்ஸ்பார்ட்டி உத்தரவை பதிவு செய்யக் கூடாது என, பதிவுத்துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்த சுற்றறிக்கை, சட்டம், விதிகளுக்கு எதிரானது என்பதால், அதை ரத்து செய்கிறேன்.நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நான்கு மாதங்களுக்குள் பதிவுக்கு தாக்கல் செய்யவில்லை என்றாலும், உரிய காரணங்களை அளித்தால், அதை பரிசீலிக்க வேண்டும். உத்தரவு
நீதிமன்றத்தின் எக்ஸ்பார்ட்டி உத்தரவு செல்லுமா, இல்லையா என்பதை சரிபார்க்க, பத்திரப் பதிவாளர் உரிய அதிகாரி அல்ல. நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டிருந்தாலோ, மாற்றம் செய்யப்பட்டிருந்தாலோ ஒழிய, அதை பதிவு செய்ய வேண்டிய கடமை, பதிவாளருக்கு உள்ளது.எனவே, பதிவு செய்ய மறுத்த உதகை இணை சார் - பதிவாளரின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை, பதிவு செய்ய உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.