சென்னை:அனல் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், மின் கோபுர வழித்தடங்களில், துணைமின் நிலையங்களுக்கு எடுத்து வரப்படு கிறது. அங்கு, மின்சாரத்தின் உயரழுத்தம் குறைக்கப்பட்டு, மின் சாதனங்கள் உதவியுடன் சீராக வினியோகம் செய்யப்படுகிறது. மின் கோபுரம் பல அடி உயரமுடையது. ஒவ்வொரு கோபுரமும் திறனுக்கு ஏற்ப, 18 மீட்டர் முதல், 45 மீட்டர் உயரம் கொண்டவை. இரும்பு கம்பி மற்றும் சிமென்ட் கலவையால் உருவாக்கப்படுகின்றன. அதிக எடை உடைய மின் கோபுரங்கள், புயல், நிலநடுக்கம், மண் அரிப்பு, நிலச்சரிவின் போது சாய்ந்து விழுகின்றன. இதனால், மின்சாரம் எடுத்து செல்வது தடைபடும். சாய்ந்த கோபுரத்திற்கு பதிலாக புதிதாக நிறுவ, 40 நாட்களாகும். அதுவரை, அந்த வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து செல்ல முடியாது. இதனால், மின் வினியோகம் பாதிக்கப்படுவதுடன், மின்சார விற்பனையும் முடங்கும்.எனவே, மின் கோபுரம் சாய்ந்து விழும் இடங்களில், மின்சாரத்தை விரைவாக எடுத்து செல்ல, அவசர கால மீட்பு கட்டமைப்பு நிறுவப்பட வேண்டும். தற்போது, அந்த கட்டமைப்பு இந்தியாவில் இல்லை என்பதால், கனடா, அமெரிக்கா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.இதற்காக, அதிக தொகை செலவிடப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சி.எஸ்.ஐ.ஆர்.,யின் கீழ் செயல்படும், எஸ்.இ.ஆர்.சி., எனப்படும், கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், இ.ஆர்.எஸ்., அதாவது, 'எமர்ஜென்சி ரிடிரைவல் சிஸ்டம் பார் பவர் லைன்ஸ்' எனப்படும், அவசர மீட்பு கட்டமைப்பை கண்டுபிடித்துள்ளது.மின் கோபுரம் சாய்ந்த இடத்தில், தரையில் 5 அடி நீள அகலத்துக்கு இரும்பு பலகை அமைக்கப்படும். அதன் மேல், மின் கோபுரத்திற்கு இணையாக அலுமினிய துாண் நிறுவப்படும்.இது, இரும்பு கோபுரத்தை விட எடை குறைவாக இருந்தாலும், இரும்பு மின் கோபுரத்திற்கு இணையான தாங்கும் திறனும் உடையது. இந்த துாணை, இரு தினங்களுக்குள் நிறுவ முடியும்.இதனால், மின்சாரத்தை தொடர்ந்து எடுத்து செல்ல முடியும். இந்த கண்டுபிடிப்பிற்கு, கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் காப்புரிமை பெற்றுள்ளது. மேலும், உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.- என்.ஆனந்தவள்ளி இயக்குனர், சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம்.
தற்காலிக கட்டமைப்பு
எஸ்.இ.ஆர்.சி.,யின் சேவைகளை, மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை, தனியார் நிறுவனங்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தடைபட்ட மின்சாரத்தை விரைவாக எடுத்து செல்வதற்காக, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் சிறப்பான முறையில், அவசர மீட்பு கட்டமைப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மூன்று நாட்களுக்குள் தற்காலிக கட்டமைப்பை நிறுவலாம். இதனால், இறக்குமதி செய்ய வேண்டியதில்லை. இறக்குமதியுடன் ஒப்பிடும் போது, 40 சதவீதம் வரை செலவு குறையும். மின்சாரம் தடைபட்டாலும் விரைந்து எடுத்து செல்ல முடியும்.
ரூ.67 கோடி மிச்சமாகும்
500 மெகா வாட் திறன் உடைய மின் நிலையத்தில் இருந்து தினமும், 1.20 கோடி யூனிட்கள் மின்சாரம் கிடைக்கும். இந்த மின்சாரத்தை எடுத்து செல்லும் வழித்தடத்தில் உள்ள ஒரு மின் கோபுரம் சாய்ந்தால், மின்சாரம் எடுத்து செல்வது தடைபடும்.ஒரு நாளைக்கு, 1.20 கோடி யூனிட் மின்சாரத்திற்கு, 1 யூனிட்டிற்கு, 2 ரூபாய் கட்டணமாக இருந்தால், மின்சாரம் தடைபடுவதால் ஒரு நாள் ஏற்படும் இழப்பு, 2.40 கோடி ரூபாய். மின் கோபுரம் புதிதாக நிறுவ, 40 நாட்களாகும். எனவே, 40 நாட்களுக்கு, 480 கோடி யூனிட் பாதிக்கப்பட்டால், 96 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அதேசமயம், 12 நாட்களுக்குள் அவசர பேரிடர் கட்டமைப்பை நிறுவினால், 14.40 கோடி யூனிட் தான் தடைப்படும். இதனால் அந்த நாட்களுக்கு, 28.80 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், மின் கோபுரம் நிறுவ, 40 நாட்களுடன் ஒப்பிடும் போது, 67.20 கோடி ரூபாய் வரை மிச்சமாகும்.