ஞானசேகரனால் வேறு பெண்கள் பாதிப்பா வீடியோ அடிப்படையில் விசாரணை
சென்னை:ஞானசேகரனின் அலைபேசியில், ஆபாச வீடியோக்கள் நிரம்பி கிடப்பதால், அவரால் வேறு ஏதேனும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என, விசாரணை நடக்கிறது.சென்னை அண்ணா பல்கலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைதான ஞானசேகரனின் அலைபேசியில், ஆபாச வீடியோக்கள், தகவல்கள் உள்ளன. அவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில், சம்பந்தப்பட்ட மாணவியை, அவர், 45 நிமிடங்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்து, பாலியல் வன்கொடுமை செய்த காட்சிகள் உள்ளன.அதுபோன்ற பல வீடியோக்கள் இருப்பதால், அவரால் வேறு ஏதேனும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. அந்த வீடியோக்களை அவர் யாருக்கெல்லாம் அனுப்பி உள்ளார்; அவர்கள் யார் என விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.அவரின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் திருப்பூரில் இருப்பதும், சம்பவத்தன்று அவர் இங்கு இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.மாணவி கடிதம்: பாதிக்கப்பட்ட மாணவியிடம், சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ள, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு, ஒரு மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளது. அப்போது, தனக்கு மருத்துவ பரிசோதனை வேண்டாம் என, மாணவி கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.