தேர்தலில் நிற்கிறாரா?
காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது: தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அருண் கோயல் கூறியுள்ளார். தலைமை தேர்தல் கமிஷனருடன் மோதல், இதற்கு காரணமா அல்லது மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்டு உள்ளதா? கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், தன் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் சேர்ந்தார். அதுபோல, அருண் கோயலை, லோக்சபா தேர்தலில் நிறுத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளதா என தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
15ல் புதிய கமிஷனர்கள்?
தலைமை தேர்தல் கமிஷனில் இரண்டு கமிஷனர்கள் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் இந்த பதவியிடங்கள், புதிதாக கொண்டு வரப்பட்ட தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்தின்படி நிரப்பப்பட உள்ளன. இதன்படி, மத்திய சட்ட அமைச்சர் தலைமையில், இரு செயலர்கள் அடங்கிய தேடல் குழு அமைக்கப்படும். இந்த குழு, தகுதி வாய்ந்த ஐந்து பேரின் பெயர்களை தேர்தல் கமிஷனர் பதவிகளுக்கு பரிந்துரை செய்யும். அவர்களில் தகுதியான நபர்களை பிரதமர் தலைமையிலான குழுநியமிக்கும்.இதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் மத்திய உள்துறை செயலர் மற்றும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் செயலர் ஆகியோர் அடங்கிய தேடல் குழு, ஒவ்வொரு பதவியிடத்துக்கும் ஐந்து பேர் கொண்ட பெயர்களைபரிந்துரை செய்ய உள்ளது. இவற்றில், புதிய தேர்தல் கமிஷனர்களாக இருவரது பெயரை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கீழ் செயல்படும் மத்திய அமைச்சர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு தேர்வு செய்யும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பெயரை, ஜனாதிபதி திரவுபதி முர்மு அதிகாரப்பூர்வமாக நியமிப்பார்.இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக்குழு, வரும் 13 அல்லது 14ம் தேதிக்குள் சந்தித்து முடிவெடுக்கும் எனவும், அவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்களின் பெயரை, ஜனாதிபதி திரவுபதி முர்மு 15ம் தேதிக்குள் நியமிக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.