உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அழகிரிக்கு பயந்து மதுரைக்கு செல்லவில்லை முதல்வர் குறித்து ஜெயகுமார் கிண்டல்

அழகிரிக்கு பயந்து மதுரைக்கு செல்லவில்லை முதல்வர் குறித்து ஜெயகுமார் கிண்டல்

சென்னை:''பணம் கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க.,வுக்கு இல்லை,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் அவர் அளித்த பேட்டி :டிசம்பர் 5, ஜெயலலிதா நினைவு தினம். அன்றைய தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன் உறுதி ஏற்பு நிகழ்ச்சி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் நடக்கவிருக்கிறது. அதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்புக் கோரி, போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் பாலியல் பலாத்காரம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. ஏற்கனவே இருந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு நாளும் இது போன்ற கொடூரங்கள் நிகழ்ந்ததில்லை. எல்லோரும் பாதுகாப்பாக இருந்தனர். குறிப்பாக, ஜெயலலிதா ஆட்சியில் தான், பெண்களின் பாதுகாப்பிற்காகவே, சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் இதுவரை, புதிய மகளிர் நீதிமன்றம் அமைக்கப்படவில்லை. கரையான்கள் போல, மக்களை சுரண்டி சாப்பிடுகிறது தி.மு.க., அரசு. தி.மு.க., கூட்டத்தில் எவ்வளவோ அடிதடி சண்டைகள் நடந்துள்ளன. தென் மாவட்டமான மதுரைக்கு, அழகிரிக்கு பயந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் செல்லாமல் இருந்தார். இப்படிப்பட்டவர்கள் தான், இன்று அ.தி.மு.க.,வில் நடக்கும் சிறு பிரச்னைகள் குறித்து பெரிதாக பேசுகின்றனர். அ.தி.மு.க.,வையோ, கட்சியின் தொண்டனையோ விமர்சனம் செய்ய துணை முதல்வர் உதயநிதிக்கு யோக்யதை கிடையாது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, தி.மு.க., தலைமை எவ்வளவு பணம் கொடுத்தது என்பது ஊரறிந்த ஒன்று. அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, பணம் கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை