ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிட கோரிய நீதிபதி விசாரணையிலிருந்து நீதித்துறை உறுப்பினர் விலகல்
சென்னை:'திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் உத்தரவுக்கு எதிரான விசாரணையில், ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிடும்படி நீதிபதி ஒருவர் அணுகினார்' என, என்.சி.எல்.ஏ.டி., எனும், தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் சரத்குமார் சர்மா குற்றம் சாட்டியதுடன், அந்த வழக்கு விசாரணை அமர்வில் இருந்து, தாமாக விலகி உள்ளார். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், 'கே.எல்.எஸ்.ஆர்., இன்பிராடெக்' நிறுவனம் உள்ளது. இதன் மீது, திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, என்.சி.எல்.ஏ.டி.,யின் ஹைதராபாத் அமர்வு உத்தரவிட்டது. இதற்கு எதிராக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் இயக்குநர் ஏ.எஸ்.ரெட்டி, என்.சி.எல்.ஏ.டி.,யின் சென்னை அமர்வில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். தள்ளிவைப்பு இந்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்றது. ஜூன் 18ம் தேதி, மனு மீதான தீர்ப்பை சென்னை அமர்வு தள்ளி வைத்தது. இந்த விவகாரத்தில், கடந்த 13ம் தேதி, நீதித்துறை உறுப்பினர் சரத்குமார் சர்மா, தொழில்நுட்ப உறுப்பினர் ஜதிந்திரநாத் ஸ்வைன் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பிக்க இருந்தது. அன்று, ஏ.எஸ்.ரெட்டி மனு மீதான விசாரணையில், ஒரு தரப்புக்கு சாதகமாக தீர்ப்பளிக்கும்படி, பெரிதும் மதிக்கப்படும் நீதிபதி ஒருவர் தன்னை அணுகியதால், விசாரணையில் இருந்து விலகுவதாக, சரத்குமார் சர்மா அறிவித்தார். இந்த சம்பவத்தை, தன் உத்தரவில் இரண்டு பத்திகளில், சரத்குமார் சர்மா பதிவு செய்துள்ளார். மேலும், இம்மனுவை விசாரிக்க, உரிய அமர்வை அமைக்க, இந்த விவகாரத்தை என்.சி.எல்.ஏ.டி., தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றும், தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். நீதிபதி ஒருவர், தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினரை அணுகி, சாதகமாக உத்தரவு பிறப்பிக்க கோரிய தகவல், தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு கடந்த 2023ம் ஆண்டு, உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து சரத்குமார் சர்மா ஓய்வு பெற்றார். பின், என்.சி.எல்.ஏ.டி.,யில் சேர்ந்தார். ஏற்கனவே அவர் பைஜுஸ் கல்வி தொழில்நுட்ப நிறுவனம், ஜேப்பியார் சிமென்ட்ஸ், ராமலிங்கா மில்ஸ் என, பல்வேறு நிறுவனங்களின் விவகாரங்களை விசாரிப்பதில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.