சென்னை: ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், ராகு காலம் முடிந்ததும் மனு தாக்கல் செய்தனர்.தமிழகத்தில் காலியாகும் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல், வரும் 19ம் தேதி நடக்கவுள்ளது. தி.மு.க., சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க., சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்நிலையில், சுபமுகூர்த்த நாளான நேற்று, இவர்கள் அனைவரும் மனு தாக்கல் செய்தனர். நேற்று வெள்ளிக்கிழமை பகல் 12:00 மணி வரை ராகு காலம் என்பதால், அது முடிந்ததும், பகல் 12:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் கமல் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதேபோல, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில், அக்கட்சி வேட்பாளர்கள் நேற்று மதியம் 1:00 மணிக்கு மனு தாக்கல் செய்தனர்.தேர்தல் நடத்தும் அதிகாரியான, சட்டசபை கூடுதல் செயலர் சுப்பிரமணியம், வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டார். அ.தி.மு.க., வேட்பாளர் தனபால், தன் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்த விபரங்களை, வரும் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.