UPDATED : ஜன 07, 2024 02:36 AM | ADDED : ஜன 07, 2024 12:37 AM
பொள்ளாச்சி;கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரில் டாஸ்மாக் மதுக்கடைகள் - 6, தனியார் 'பார்' - 4, லாட்ஜ் உடன் சேர்ந்த 'பார்' - 6 உள்ளன. கடந்த ஏழு மாதங்களாக லைசென்ஸ் பிரச்னையால் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் மதுபான 'பார்'கள் தற்போது நகர பொறுப்பில் உள்ள ஆளுங்கட்சி நபரின் ஆதரவாளர்கள் பெயரில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.பொள்ளாச்சி ஏ.டி.எஸ்.சி., தியேட்டர் ரோட்டில் தனியார் வணிக வளாக மதுபான 'பார்' ஏற்கனவே உள்வாடகைக்கு எடுத்து இருந்த தி.மு.க.,வை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், தற்போது ஏலம் எடுத்த அதே ஆளுங்கட்சி நபர்களுக்கும் பிரச்னை எழுந்தது. ஏல உரிமை பெற்ற தி.மு.க.,வினர், இரவில் 'பார்' பூட்டை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே சாலையில் போலீசார் முன் மோதல் சூழல் உருவானது. சிலர் வீடியோ எடுத்து வைரலாக்கினர்.தி.மு.க.,வினர் சிலர் கூறியதாவது:பொள்ளாச்சி நகரதி.மு.க.,வில் முக்கிய பொறுப்பில் உள்ள நபர், மது'பார்'கள் அனைத்தையும் தனதுகட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டார். 'பார்ட்டி பண்ட்' என்ற பெயரில் மாதா மாதம் கடைக்கு50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்கிறார். தலைமை வரை பகிர்ந்து அனுப்புவதாக வெளிப்படையாகவே கட்சியினர் மத்தியில் கூறிவருகிறார். மாவட்ட நிர்வாகி ஒருவர் இவருக்கு முழு ஆதரவு. இருவரும் நடத்தும் நடத்தும் அத்துமீறல் வசூலால் கட்சிக்கு கெட்ட பெயர். நகர பொறுப்பிலுள்ள நபர் தொடர்ந்து பதவியில் இருந்தால் வரும் லோக்சபா தேர்தலில் தொண்டர்கள் கூட வேலை செய்ய மாட்டார்கள்; ஓட்டுக்கள் சரிவதும் உறுதி, என்றனர்.