உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜல்லி, எம்-சாண்ட் எடுத்து செல்ல இனி ஆன்லைன் பாஸ் கட்டாயம்: கனிமவளத்துறை உத்தரவு

ஜல்லி, எம்-சாண்ட் எடுத்து செல்ல இனி ஆன்லைன் பாஸ் கட்டாயம்: கனிமவளத்துறை உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:கருங்கல் ஜல்லி, 'எம்--சாண்ட்' போன்றவற்றை எடுத்து செல்ல, 'ஆன்லைன்' முறையில், நடைச்சீட்டு பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 3,000க்கும் அதிகமான இடங்களில், தனியார் கருங்கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்த குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கருங்கற்கள், கிரஷர்கள் எனப்படும் கல்லுடைப்பு ஆலைகள் வாயிலாக உடைத்து, ஜல்லிகளாக மாற்றப்படுகின்றன.

நடைச்சீட்டு

இதில் ஒரு பகுதி கருங்கற்கள், ஆலைகளில் துகள்களாக நொறுக்கப்பட்டு சுத்தப்படுத்தி, எம் - சாண்ட் ஆக கட்டுமான பணிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதில், ஒவ்வொரு இடத்திலும் எந்த அளவுக்கு கருங்கல் வெட்டி எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த, இவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு, கனிம வளத்துறை சார்பில் நடைச்சீட்டு வழங்கப்படுகிறது. இதுவரை, 'மேனுவல்' முறையில் இருந்ததால், குவாரி ஒப்பந்ததாரர்கள் நடைச்சீட்டுகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. இதனால், ஒரே நடைச்சீட்டை பயன்படுத்தி, அதிக அளவில் கனிமங்கள் எடுத்து செல்லப்படுவதாக புகார் எழுந்தது. அதனால், சுரங்கங்கள், குவாரிகளில் இருந்து கனிமங்களை எடுத்துச் செல்வதற்கான நடைச்சீட்டுகளை, 'ஆன்லைன்' முறையில் வழங்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான அரசு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், கடந்த வாரம் எம் - சாண்ட், ஜல்லி உள்ளிட்ட பொருட்களுக்கு, 'மேனுவல்' முறையில் நடைச்சீட்டு வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், கட்டுமான பணிகளுக்கு எம் - சாண்ட், ஜல்லி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கனிம வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'மேனுவல்' முறையில் வழங்கப்படும் நடைச்சீட்டுகள் நிறுத்தப்பட்டுஉள்ளன. 'ஆன்லைன்' முறையில் இதற்கான நடைச்சீட்டுகள், 'டிரான்சிட் பாஸ்' வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.

நடவடிக்கை

இதற்காக, https://mimas.tn.gov.in/ என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இதில், தனி நபர், நிறுவனம் ஆகிய பிரிவுகளில் தேவையான விபரங்களை அளித்து, 'பாஸ்' பெறலாம். குவாரி குத்தகைதாரர்கள், கிரஷர் உரிமையாளர்கள், எம் - சாண்ட் ஆலைகள், இந்த பாஸ்களை பெறலாம். ஆன்லைன் பாஸ் இல்லாமல், ஜல்லி, எம் - சாண்ட் எடுத்துச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான அறிவிப்புகளை, மாவட்ட அளவில் வெளியிட, கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KNC SARAN
ஜூன் 18, 2025 14:09

கனிம வளங்களை எவ்வளவு ஆழம் வரை வெட்டி எடுக்கலாம் நான் பார்த்த வரை 70அடி ஆழம் வரை கட்டாயமாக வெட்டி இருப்பார்கள் எங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில்


S.jayaram
ஜூன் 18, 2025 09:25

என்னா ஒரு நேர்மை, நான்காண்டுகள் கொள்ளை அடித்து விட்டு இப்போ நேர்மையாக செயல்படுவது போல ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கிறார்களாம், எனக்கு ஒரு சந்தேகம் ஒருமுறை கனிமவள முறைகேடு என்று அமலாக்கத்துறை கூட ரைட் எல்லாம் செய்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எல்லாம் சம்மன் அனுப்பியது அந்த வழக்கு என்னாச்சு? கிடப்பில் போட்டாச்சா? ஆனா நாட்டு மக்களை என்னவா ஏமத்துறாங்கையா? இந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்


Varadarajan Nagarajan
ஜூன் 18, 2025 07:47

கனிமங்கள் வெட்டியெடுக்கப்படும் இடங்களை அவ்வப்போது எந்தவித ஆய்வும்செய்யாமல் விட்டுவிட்டு சாலையில் எடுத்துசெல்லும் வாகனங்களுக்கு நடைசீட்டு அளிப்பதால் என்னப்பயன்? இதற்குமுன்பு குவாரிகளிலிருந்து ஆற்றுமணல் விற்பனைசெய்தபொழுதும் இந்த ஆன்லைனில் நடைமுறை இருந்ததே. அப்பொழுது எந்த தவறுமில்லாமல் எல்லாம் சரியாக நடந்ததா? அப்பொழுது நடந்ததைப்போல காவல்துறை, வருவாய்துறை மற்றும் போக்குவரத்து துறை என அனைவருக்கும் வருமானம் கிடைக்க இது ஒரு வழி. அவ்வளவுதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை