சென்னை:வீட்டு வேலைக்கு அமர்த்திய இளம் பெண்ணின் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்த வழக்கில் சிக்கியுள்ள, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் மகன், மருமகளை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநறுகுன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர், வீரமணி. பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த இவரது, 18 வயது மகள் பிளஸ் 2 படித்துள்ளார். இவரை டாக்டருக்கு படிக்க வைப்பதாக, சென்னை பல்லாவரம் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ,35, மருமகள் மார்லினா,31 ஆகியோர் ஆசை காட்டி உள்ளனர். பின், தாங்கள் வசித்து வரும், சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலைக்கு அமர்த்தி கொடுமைப்படுத்தி உள்ளனர்.இளம் பெண்ணின் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து, சென்னை நீலாங்கரை மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து, இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேலும், காயங்கள் குறித்து டாக்டர்களிடமும் அறிக்கை பெறப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், ஆன்ட்ரோ மற்றும் மார்லினா மீது, பெண்கள் மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை உட்பட, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கில் சிக்கிய இருவரும், வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாக உள்ளனர்.'இவர்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' என, எம்.எல்.ஏ., கருணாநிதியும் கூறிவிட்டார். இதனால், தம்பதி பதுங்கி இருக்கும் இடம் குறித்து துப்பு துலக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருவரும் விரைவில் சிக்குவர் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.நடவடிக்கை என்ன?
கமிஷன் விசாரணை!
உடலில் கை, முதுகு என, பல
இடங்களில் சூடு வைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இளம் பெண் பட்டியல் இன
சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனும்
விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. அதன் தமிழக இயக்குனர் ரவிவர்மன், இளம் பெண்
சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து,
நீலாங்கரை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியிடம், 30
நிமிடங்களுக்கு மேல் விசாரணை செய்துள்ளார்.