உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறந்த நிர்வாகத்தை மோடி தந்துள்ளார்

சிறந்த நிர்வாகத்தை மோடி தந்துள்ளார்

சேலம்:சேலத்தில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: இந்தியாவில், 10 ஆண்டுகளாக சிறப்பான நிர்வாகத்தை மோடி தந்துள்ளார். மொழி, கலாசாரம் என பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில், பிரதமர் மோடி வரலாற்று சிறப்பு மிக்க ஆட்சியை வழங்கியுள்ளார். ஒரு மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வாங்க சிரமப்பட்ட காலம் மாறி, மோடி ஆட்சியில் ஒரே நேரத்தில், 11 மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்கப்பட்டன. நடிகர் சரத்குமார்: வேறு வழியின்றி, தி.மு.க., பல்வேறு குறைகளை கூறி, விஷ விதைகளை மக்களிடையே விதைத்து வருகிறது. அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக மக்கள், தேர்தலில் புரட்சியை ஏற்படுத்துவர். மோடி, 'ஹாட்ரிக்' பிரதமராக மீண்டும் வருவார்.நடிகை குஷ்பு: பிரதமர் வரும்போது கூடும் கூட்டம், தி.மு.க.,வை போல காசு கொடுத்து அழைத்து வரப்படுவதில்லை. தமிழகத்தில் அனைவரின் மீதும் பாசம் வைத்துள்ள மோடிக்கு அவர் பிரமிக்கும்படி வெற்றிகளை சமர்ப்பிக்க வேண்டும்.மத்திய அமைச்சர் முருகன்: கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், பிரதமர் மோடி மேற்கொண்ட பிரசாரத்தில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மாநிலங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல, 3ம் முறை பிரதமராக மோடி வரவேண்டும். அதற்கு அனைவரும் உழைக்க வேண்டும்.அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: பிரதமர் மோடியை, 3ம் முறை பிரதமராக்க அமைத்துள்ள கூட்டணியில், அ.ம.மு.க., இணைந்து வெற்றிக்கு பாடுபடும். தமிழகத்தின், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற, நாம் அனைவரும் ஒரு மாதம் கடினமாக உழைக்க வேண்டும்.ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர்: பிரதமர் மோடி, 10 ஆண்டுகளில் மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அகில இந்திய அளவில், 400 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர மத்திய அரசுடன் இணக்கம் காட்டும் அரசு தேவை.உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து: இங்கு ஆட்சியில் இருப்பவர்கள், தமிழகத்தின் அனைத்து கோவில்களையும் கொள்ளையடிக்கின்றனர். கோவில்களை இடிக்கின்றனர். ஹிந்துக்களை கேலி செய்கின்றனர். நம் மதத்தை, தர்மத்தை, நீதியை, தெய்வத்தை, கோவிலை காப்பாற்ற மோடி பிரதமராக வரவேண்டும்.பா.ம.க., தலைவர் அன்புமணி: பிரதமர் மோடி, 3ம் முறை இந்தியாவின் பிரதமராக வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கில், பா.ம.க., தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. நாடு, தமிழக நலன் கருதி, இந்த முடிவை எடுத்துள்ளோம். நமக்கெல்லாம் மாற்றம் வேண்டும். மக்களும் மாற்றம் வராதா என்ற ஏக்கத்தில் உள்ளனர். மக்களின் ஏக்கத்தை தணிக்கவே, பா.ம.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: பிரதமர் மோடி சேலம் வந்திருக்கிறார். தமிழகத்தில் இருக்கக்கூடிய பலம் பொருந்திய எல்லா தலைவர்களையும் தன்னோடு அழைத்து வந்திருக்கிறார். மாற்றத்திற்கான கூட்டணியாக, வெற்றிக்கான கூட்டணியாக, தமிழகம், புதுச்சேரியை சேர்த்து, 40க்கு, 40 தொகுதியில் வெற்றி பெறுவதோடு நாடு முழுதும், 400க்கும் மேற்பட்ட இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, 3ம் முறை ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை