உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இசை ஆசிரியர்கள் இல்லை சிறப்பு பள்ளிகளில் அவலம்

 இசை ஆசிரியர்கள் இல்லை சிறப்பு பள்ளிகளில் அவலம்

சென்னை: பார்வையற்ற மாணவர்களுக்கான, அரசு சிறப்பு பள்ளிகளில், இசை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், 'ஆர்மோனியம், கீபோர்டு, தபேலா' உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இசை கருவிகள் ஓராண்டுக்கு மேலாக கேட்பாரற்று கிடக்கின்றன. மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், பார்வை குறைபாடுடைய மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், 10 சிறப்பு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இதர மாற்றுத்திறனாளி மாணவர்களை விட, பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கு, இசை பாடப்பிரிவு அவசியம் என்பதால் , அனைத்து சிறப்பு பள்ளியிலும், இசை அறை, ஆர்மோனியம், தபேலா, கீ போர்டு இசைக் கருவிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இக்கருவிகளை இசைத்து பாடம் நடத்தும் திறன் பெற்ற, இளங்கலை இசை பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தோர், இசை ஆசிரியராக நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னை மற்றும் தஞ்சையில் செயல்படும் பார்வையற்றோருக்கான அரசு சிறப்பு பள்ளிகள் தவிர, இதர மாவட்ட சிறப்பு பள்ளிகளில், கடந்த ஓராண்டிற்கு மேலாக, இசை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், இசைக் கருவிகள் இருந்தும், அவற்றை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: மொத்தம் உள்ள, 10 சிறப்பு பள்ளிகளில், தற்போது 100க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, இசை கருவிகள் பயன்பாடு இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு மாற்று ஆசிரியர்கள் வழியாக பாடம் நடத்த முடியும். ஆனால், இசை பாடத்திற்கு, அவ்வாறு நடத்த முடிவதில்லை. எனவே, மாணவர்கள் நலன் கருதி, இளங்கலை இசை பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றோரை, இசை ஆசிரியராக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ