‛‛தற்போது எந்த நிவாரணமும் வழங்க முடியாது: செந்தில்பாலாஜி கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், தற்போதைக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக்கூறியுள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணையில் உள்ளது.இந்நிலையில், தன் மீதுள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, தற்போது அமலாக்கத்துறை நடத்தும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என செந்தில்பாலாஜி முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார்.இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். ரமேஷ் மற்றும் சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை விசாரணை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. இதனால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது. தடை விதிக்கவும் முடியாது எனக்கூறினர். மேலும், இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.காவல் நீட்டிப்பு
இதனிடையே, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், செந்தில்பாலாஜியின் காவலை மார்ச் 18 ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. காவல் நீட்டிக்கப்படுவது இது 26வது முறை.