ஜனவரி 1, 1910இலங்கையின் திரிகோணமலையில், வேலுப்பிள்ளையின் மகனாக, 1853, மார்ச் 7ல் பிறந்தவர், வே.அகிலேசபிள்ளை. இவர், குமாரவேலு பிள்ளை, தையல்பாகம் பிள்ளை உள்ளிட்டோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றார். அரசு பள்ளி ஆசிரியராகவும், திரிகோணமலை விஸ்வநாதசுவாமி கோவில், மடத்தடி வீரகத்தி பிள்ளையார் கோவில்களின் நிர்வாக அறங்காவலராகவும் செயல்பட்டார். 'திருக்கரசைப் புராணம், வெருகல் சித்திரவேலாயுதர் காதல், நரேந்திர சிங்கராசன் வசந்தன் சிந்து' ஆகிய நுால்களை பதிப்பித்தார். இவர், 'திருக்கோணாசல வைபவம்' எனும் வைணவ சிற்றிலக்கியத்தை எழுதினார்.தொடர்ந்து, 'திருகோணமலை விசுவநாதசுவாமி ஊஞ்சல், திருகோணமலை சிவகாமியம்மன் ஊஞ்சல், பத்திரகாளி ஊஞ்சல், நிலாவெளி சித்தி விநாயகர் ஊஞ்சல், திருக்கோணைநாயகர் பதிகம், வில்லுான்றி கந்தசாமி பத்துப் பதிகம், விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம்' உள்ளிட்ட நுால்களை எழுதினார். இதன் மூலம், இலங்கையில் உள்ள கோவில்களின் உண்மையான வரலாறு, அது சார்ந்த கலாசாரம் உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்தினார். இனக் கலவரத்தின் போது கோவில்கள் இடிக்கப்படுவதை, 'அன்பே சிவம்; சிவம் அழிந்தால் சவம்' எனக் கூறி கண்டித்த இவர், தன், 56வது வயதில், 1910ல், இதே நாளில் மறைந்தார்.பதிப்பாளர், உரையாசிரியர், நுாலாசிரியர் என, தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த இலங்கை தமிழ் இலக்கியவாதியின் நினைவு தினம் இன்று!