சென்னை: கடந்த 2024ல், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணி கட்சிகள் பெற்ற, 41.33 சதவீத ஓட்டுகளை குறிப்பிட்டு, 'வரும் சட்டசபை தேர்தலில், 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்த கணக்கு தவறாக இருப்பதால், அக்கட்சி நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர். சென்னையில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் பேசிய பழனிசாமி, 'கடந்த 2024 லோக்சபா தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளை கூட்டினால், 41.33 சதவீதம் வருகிறது. 210 தொகுதிகள்
'இதில், 84 தொகுதிகளில் தி.மு.க.,வை விட அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம். 15 தொகுதிகளில், தி.மு.க.,வை விட ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும், 18 தொகுதிகளில், 1 முதல் 2 சதவீதத்திற்கு குறைவாகவும் மட்டுமே பெற்றுள்ளோம். 'எனவே, வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி. 210 தொகுதிகளில் வெல்லும்' என்றார். பழனிசாமியின் இந்த 41.33 சதவீத கணக்கை, பன்னீர்செல்வம், தினகரன் ஆதரவாளர்கள் தப்புக் கணக்கு என, விமர்சித்து வருகின்றனர். தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. அ.தி.மு.க., கூட்டணிக்கு வர, த.வெ.க., மறுத்து விட்டது. தே.மு.தி.க., முரண்டு பிடித்து வருகிறது. 'இதனால், கூட்டணி அமைக்க முடியாமல் தவித்து வரும் பழனிசாமி, தப்புக் கணக்கு போட்டு சொந்த கட்சியினரையும், பா.ஜ., தலைமையையும் ஏமாற்றி வருகிறார்' என, சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். இது தொடர்பாக, அ.ம.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஒரு தேர்தலில் கிடைக்கும் ஓட்டுகள், அடுத்த தேர்தலில் அப்படியே கிடைக்கும் என்று கூற முடியாது. தேர்தல் கணக்கு என்பது கூட்டல், கழித்தல் கணக்கு அல்ல. மக்களின் மனநிலையை பொறுத்து, தேர்தலுக்கு தேர்தல் ஓட்டு கணக்கு மாறும். கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனி கூட்டணி அமைத்தும், பா.ஜ., தனி கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. அப்போது, பா.ஜ., கூட்டணியில் தினகரனும், பன்னீர்செல்வமும் இருந்தனர். இவர்களை சேர்க்க, இப்போது பழனிசாமி மறுத்து வருகிறார். 41.33 சதவீதம்
அப்போது, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., இப்போது கூட்டணியை உறுதிபடுத்தவில்லை. ஆனால், அவர்கள் பெற்ற ஓட்டுகளையும், தனது 41.33 சதவீத கணக்கில் பழனிசாமி சேர்த்துள்ளார். மேலும், 2024ல் தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இருந்தார். இப்போது, அவர் மாற்றப்பட்டுள்ளதால், அவருக்காக பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்தவர்கள், வரும் தேர்தலிலும் ஓட்டளிப்பர் என, கூற முடியாது. அது மட்டுமல்லாது, மோடி பிரதமராக வேண்டும் என, அப்போது பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்தவர்களும் உண்டு; பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கவில்லை என்பதால், அப்போது அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தவர்களும் உண்டு. அவர்கள் வரும் தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிக்க வாய்ப்பில்லை. 2024ல் ஒன்றாக இருந்த பா.ம.க., இப்போது பிளவுபட்டுள்ளது. எனவே, வரும் 2026ல் அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி என கூட்டணி அமைந்தாலும், பழனிசாமியின் கணக்குப்படி, 2024ல் பெற்றதை விட குறைவான ஓட்டு சதவீதத்தையே பெற முடியும். இது தெரிந்தும் தன் கட்சியினரை திருப்திபடுத்தவும், பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை ஏமாற்றவும், பழனிசாமி தப்புக் கணக்கு போட்டு வருகிறார். இவ்வாறு கூறினார்.
வலுவான கூட்டணி எப்போது?
அ.தி.மு.க., பொதுக்குழுவில் பேசிய பழனிசாமி, 'அ.தி.மு.க., சொந்த பலம் உள்ள கட்சி. தி.மு.க.,வுக்கு சொந்த பலம் இல்லை. அதனால்தான், தி.மு.க., கூட்டணி வலுவான கூட்டணி என, திரும்ப திரும்ப முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். தேர்தலுக்கு ஒரு மாதம் முன், வலுவான கூட்டணி அமைப்போம்' என்றார். இதிலிருந்து பழனிசாமி என்ன சொல்ல வருகிறார்? கூட்டணி இல்லாமலேயே அ.தி.மு.க., வெற்றி பெறும் என்கிறாரா; த.வெ.க., வர மறுத்து விட்டதால், வலுவான கூட்டணி அமைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டாரா? தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் கூட்டணி அமைக்க முடியும் என்றால், கூட்டணி அமைப்பதில் சிக்கல் இருப்பதை ஒப்புக் கொள்கிறாரா என்ற கேள்விகள் எழுகின்றன.