மாணவி விவகாரத்தில் கட்சிகளின் போராட்டம் உண்மையான அக்கறையால் அல்ல: நீதிபதி கருத்து
சென்னை:'அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை விவகாரத்தில், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் மட்டுமே உள்ளன; உண்மையான அக்கறையால் அல்ல' என்று வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 'இதை அரசியலாக்க வேண்டாம்' என்று கூறியுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், நேற்று காலை வழக்குகளை விசாரிக்க துவங்கினார். முறையீடு
அப்போது, வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, ''அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை சம்பவத்தைக் கண்டித்து, பா.ம.க., மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ''காவல் துறையிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளனர். போலீசார் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்,'' என, முறையீடு செய்தார்.அப்போது நீதிபதி கூறியதாவது:இந்த விவகாரத்தில், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் மட்டுமே உள்ளன; உண்மையான அக்கறையால் அல்ல. ஊடகங்களும் இந்த விஷயத்தில் பொறுப்புடன் செயல்படவில்லை. இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததில் இருந்து, செய்தி தொலைக்காட்சிகளில், 'ஊடக விசாரணை' நடத்தப்பட்டு வருகிறது. இப்பிரச்னையை பற்றி, ஊடகங்கள் செய்தி வெளியிடக்கூடாது என்று கூறவில்லை. ஆனால், அவர்கள் செய்யும் விதம் ஏற்புடையதாக இல்லை.மாணவி பாலியல் விவகாரத்தை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள்; மோசமான சம்பவத்தை, ஏன் இந்த அளவுக்கு பிரபலப்படுத்துகிறீர்கள்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு என்ற பெயரில், அந்த பெண்ணை அவமானப்படுத்துகிறீர்கள். மாணவிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அனைவரது கடமை. இந்த சம்பவத்தை பொறுத்தவரை நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, ''இந்த போராட்டம், பெண்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது,'' என்றார், வழக்கறிஞர் கே.பாலு. வெட்கப்படுகிறேன்
இதையடுத்து, நீதிபதி கூறியதாவது:இந்த விஷயத்தில் ஆண், பெண் என்று ஏன் பாலின பாகுபாடு பார்க்கிறீர்கள்; பெண்களுக்கு மட்டும்தான் பிரச்னையா? பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனத்தை செலுத்தாமல், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குகின்றனர். இந்த காலத்தில் வாழ நான் வெட்கப்படுகிறேன்.அண்ணா பல்கலை மாணவி பாதுகாப்புக்காக, போராடுபவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கை வைத்துச் சொல்லுங்கள், எத்தனை பேர் தன் தாய், மனைவி, மகளுக்கு மரியாதை, சுதந்திரம் வழங்குகிறீர்கள்? முதலில் தங்கள் வீட்டு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். சுயபரிசோதனை
இப்போது, ஒரு மாணவி மட்டுமா பாதிக்கப்பட்டுள்ளார்; பெண்கள் பல இடங்களில் பாதிக்கப்படுகின்றனர். ஏன் பெண்களுக்கு எதிரான சம்பவத்துக்கு மட்டும் போராடுகிறீர்கள்; ஆண்கள் பாதிக்கப்படவில்லையா? பாதிப்பு என்றால் அனைவருக்கும் ஒன்றுதான்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரத்தில், நாம் அனைவரும் இணை குற்றவாளிகள் தான். இதற்கு நாம் அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும்; வெட்கப்பட வேண்டும்.இவ்விவகாரத்தில், உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கிறது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளனர். இதற்கு மேல் என்ன வேண்டும்?இந்த சமூகம் முழுதுமாக பெண்களை அடிமைப்படுத்துவது மற்றும் அவர்களுக்கு எதிரான கொடுமைகளை கட்டவிழ்த்து விடுவது ஏன் என்பதை, சுயபரிசோதனை செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. மாறாக, உண்மையான அக்கறையின்றி அரசியலாக்கப்படுகிறது. இந்த விவகாரத்தை அரசியலாக்காதீர்கள். போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி தொடர்பான விவகாரத்தில் தலையிட முடியாது.இவ்வாறு நீதிபதி கூறினார்.