உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெடெக்ஸ் ஸ்கேம் சி.பி.ஐ., போல நடித்து பணம் மோசடி: எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்

பெடெக்ஸ் ஸ்கேம் சி.பி.ஐ., போல நடித்து பணம் மோசடி: எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்

சென்னை: 'பார்சலில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளீர்கள் என, மிரட்டல் விடுத்து பண மோசடி செய்யும் போலி சி.பி.ஐ., அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, மாநில சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய் குமார் எச்சரிக்கை செய்துள்ளார்.அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள், பொது மக்களின் மொபைல் போனுக்கு, 'பெட் எக்ஸ்' எனப்படும் சரக்கு போக்குவரத்து மற்றும் கூரியர் நிறுவனங்களில் இருந்து அனுப்புவது போல, 'உங்கள் பெயரில் அனுப்பப்பட்ட மர்ம பார்சல் திரும்ப வந்து விட்டது. உடனே தொடர்பு கொள்ளவும்' என, குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். தொடர்பு கொண்டால், 'நாங்கள் பெட் எக்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் பெயரில் அனுப்பப்பட்ட மர்ம பார்சல் எங்களிடம் உள்ளது. 'அதில், சட்ட விரோதமாக பெறப்பட்ட பாஸ்போர்ட்டுகள், கிரெடிட் கார்டுகள், சிம்கார்டுகள் மற்றும் போதை பொருட்கள் இருப்பதை, மும்பை போலீசார் கண்டறிந்துள்ளனர்' என, மிரட்டுகின்றனர்.அதை மறுத்தால், 'தொடர்பை துண்டித்து விடாதீர்கள். மும்பை சி.பி.ஐ., அதிகாரிக்கு இணைப்பு தருகிறோம்' என்கின்றனர். பின், எதிர்முனையில் பேசுபவர், தொடர்பு கொண்ட நபரின் ஆதார் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை தெரிவித்து, 'நீங்கள் தான் பார்சலில் போதை பொருள் கடத்தி உள்ளீர்கள். உங்களுக்கு சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளது. உங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும், உங்கள் கூட்டாளி ஒருவரை கைது செய்துள்ளோம. அவர், போதை பொருள் கடத்தலில் உங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். நீங்கள் உடனடியாக மும்பைக்கு வர வேண்டும். மறுத்தால், விடிவதற்குள் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்' என, மிரட்டுகின்றனர். மேலும், 'கைது நடவடிக்கையில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உங்கள் வங்கி கணக்குளை ஆய்வு செய்வர்' என, கூறுவர்.தொடர்ந்து ரிசர்வ் வங்கி அதிகாரி போல பேசும் மர்ம நபர், 'நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வையுங்கள். ஆய்வு செய்த பின், பணம் திரும்ப அனுப்பப்படும். இதற்கு சம்மதம் இல்லையென்றால் சி.பி.ஐ., அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு வருவர்' என, கூறுகின்றனர். பயந்து பணம் அனுப்பினால், அதை எடுத்துக் கொண்டு, தொடர்பை துண்டித்து விடுகின்றனர். சமீபத்தில் இத்தகைய மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக, இரண்டு மாதங்களில், 390 வழக்குகள் பதிவாகி உள்ளன. செய்யாத குற்றத்திற்காக நீங்கள் ஏன் பணத்தை இழக்க வேண்டும்? பார்சலில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு உள்ளீர்கள் மிரட்டல் வந்தாலோ அல்லது உங்கள் மொபைல் போனுக்கு வரும் குறுஞ்செய்திகள் மீது சந்தேகம் எழுந்தாலோ அருகில் உள்ள, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளியுங்கள். அல்லது, கட்டணமில்லா, 1930 என்ற எண்ணிற்கும், www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ