உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோர்ட் ஆணையை அமல்படுத்தாத இன்ஸ்.,சுக்கு அபராதம்

கோர்ட் ஆணையை அமல்படுத்தாத இன்ஸ்.,சுக்கு அபராதம்

சென்னை : சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக உள்ள இருவருக்கு, ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட்டை அமல்படுத்தாத, வரஞ்சரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிலை திருட்டு வழக்கில், பாபு, ஐயப்பன் என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு, சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு, கடந்த 6ம் தேதி தலைமை பெருநகர் மாஜிஸ்திரேட் என்.கோதண்டராஜ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களுக்கு ஜாமினில் வெளிவர முடியாத, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் வரஞ்சரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கு, செப்., 30ல் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உத்தரவை இரண்டு மாதங்களாக செயல்படுத்தாததால், வழக்கு இருமுறை தள்ளி வைக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போதும், சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லது மாவட்ட காவல்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கு, 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. வழக்கை தொடர்ந்து தள்ளி வைப்பதற்கான சரியான காரணத்தை, இந்த நீதிமன்றம் கண்டறியவில்லை. எனவே, வரஞ்சரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் இரண்டு வாரத்துக்குள் செலுத்த வேண்டும்.அபராதத்தை செலுத்த தவறினால், தொகையை வசூலிக்க இந்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். சிலை கடத்தல் வழக்கில், தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில், கள்ளக்குறிச்சி எஸ்.பி., சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும், 30ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை