சென்னை : அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஏற்கனவே பல்வேறு சலுகைகள் வாரி வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அடுத்த 'ஜாக்பாட்' அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் இடைநிற்றல் (டிராப்அவுட்) சதவீதத்தைக் குறைப்பதற்கு, சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க உள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு 1,500 ரூபாயும், பிளஸ் 2 மாணவர்களுக்கு 2,000 ரூபாயும் கிடைக்கும்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச பாடப் புத்தகம், இலவச மதிய உணவு, இலவச சீருடை, இலவச சைக்கிள் உள்ளிட்ட, பல சலுகைகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன. இத்துடன் இலவச, 'லேப்-டாப்' கம்ப்யூட்டர் விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு 'ஜாக்பாட்' அறிவிப்பை, தமிழக அரசு நேற்று பட்ஜெட்டில் வெளியிட்டது. அரசுப் பள்ளி மாணவர்கள், கல்வியை இடையில் நிறுத்துவதைத் தடுக்கவும், அதன் சதவீதத்தைக் குறைக்கவும், பத்து மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு 1,500 ரூபாயும், பிளஸ் 2 மாணவர்களுக்கு 2,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இத்தொகை ஒரே ஒரு முறை வழங்கப்பட்டு, அது பொதுத்துறை நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு, பள்ளிப்படிப்பை முடிக்கும் போது வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், 394 கோடியே நான்கு லட்ச ரூபாய் ஒதுக்கீட்டில், 24 லட்சத்து 94 ஆயிரத்து 649 மாணவர்கள் பயன்பெறுவர்.* பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, நடப்பாண்டில் 498.24 கோடி ரூபாயும், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள, பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு, 27 கோடியே ஏழு லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.* நடப்பாண்டில், பள்ளிக் குழந்தைகளுக்கு 2 செட் சீருடைகள் வழங்கப்படும். இதற்கு, கூடுதலாக 59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 2012-13ம் ஆண்டு முதல், பள்ளிக் குழந்தைகளுக்கு, 4 செட் சீருடைகள் வழங்கப்படும். இதற்கு ஆண்டிற்கு, 177 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.* அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு, கால்சட்டைக்குப் பதிலாக முழுக் கால் சட்டையும் (பேன்ட்), மாணவியருக்கு பாவாடை, தாவணிக்குப் பதிலாக சல்வார் கமீசும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தையல் கூலியும் உயர்த்தித் தரப்படும். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும், காலணிகள் வழங்கப்படும்.* சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும். இதில், பள்ளிக் கல்வி சார்ந்த அனைத்து இயக்குனரகங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கட்டடங்களில் இடம்பெறுவதுடன், கூட்ட அரங்குகள், பயிற்சி மையங்கள், கலந்துரையாடல் மையங்கள், புகைப்படக் காட்சிக் கூடத்துடன் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.* தேனி மாவட்டம், போடியில் அரசுப் பொறியியல் கல்லூரி துவக்கப்படும். தொழிற்கல்வி பயிலும் முதல் தறைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு, வழங்கப்படும் கல்விக் கட்டணம் தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக, நடப்பாண்டில் 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கும், அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச, 'லேப்-டாப்' வழங்கப்படும் என, தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இத்திட்டம், அண்ணா பிறந்த நாளான செப்.,15ம் தேதி துவக்கப்படும். நடப்பாண்டில், 9 லட்சத்து 12 ஆயிரம் 'லேப்-டாப்'கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.