பொது பயன்பாட்டு இடங்களை விருப்பப்படி மாற்ற தடை விதிப்பு
சென்னை:'மனைப்பிரிவு திட்டங்களில் சமுதாய கூடம், சிறுவர் பள்ளி போன்ற பொது பயன்பாட்டுக்கு வரையறுக்கப்பட்ட இடங்களை, வேறு பணிகளுக்கு மாற்றக் கூடாது' என, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., உத்தரவிட்டுள்ளது. மனைப்பிரிவு திட்டங்களை உருவாக்குவோர், அதில் பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல் போன்றவற்றுக்காக, 10 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். இதற்கு அடுத்தபடியாக, திருமண மண்டபம், சமுதாய கூடம், சிறுவர் பள்ளி போன்ற தேவைகளுக்காக, 10 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை, உரிய துறைகள் பெறவில்லை என்றால், அதை வேறு பணிகளுக்கு மாற்ற சட்டப்படி வழிமுறை உள்ளது. ஆனால், இந்த வழிமுறையை தவறாக பயன்படுத்தி, அடிப்படை ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் மாற்றப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., பிறப்பித்துள்ள உத்தரவு: மனைப்பிரிவுகளில் திருமண மண்டபம், சமுதாயக் கூடம் போன்ற பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் நிலங்கள், உரிய துறைகள் பெறவில்லை என்று கூறி, வேறு தேவைகளுக்கு மாற்றப்படுகின்றன. பொது பயன்பாட்டு நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற கூடாது என, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன. எனவே, பொது உபயோக நிலங்களை உரிய துறைகள் பெறவில்லை என்பதால், வேறு பணிக்கு மாற்ற கோரிக்கை வந்தால், அந்த மனைப்பிரிவில் அடிப்படையாக இருக்க வேண்டிய ஓ.எஸ்.ஆர்., எனப்படும் திறந்தவெளி ஒதுக்கீடு, சிறுவர்விளையாட்டு திடல் ஆகியவற்றுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதைஉறுதி செய்ய வேண்டும். அதன்பின், டி.டி.சி.பி.,வழிகாட்டுதல்கள் அடிப்படையில், இக்கோரிக்கைகள் மீது முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.