சென்னை : சார் - பதிவாளர் அலுவலகங்களில், 1865ம் ஆண்டு முதல் பதிவான சொத்து ஆவணங்களின் நகல்களை, இணையவழியில் பெறும் வசதி துவங்கப்பட்டு உள்ளது.பதிவுத்துறை துவங்கப்பட்டதில் இருந்து பதிவான, 10 கோடி ஆவணங்கள் தொகுக்கப்பட்டு, கணினியில் சேமிக்கப்பட்டு உள்ளன.இதில், உயில், டிரஸ்ட் உள்ளிட்ட ஆவணங்களை தவிர்த்து, சொத்து தொடர்பான ஆவணங்களின் நகல்களை பெற, இணையவழியில் விண்ணப்பிக்கவும், தேவையான கட்டணங்களை இணைய வழியில் செலுத்தி பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் 31.49 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மின்னணு கையெழுத்திட்ட இந்த சான்றிதழ் நகல்களை பொதுமக்கள், https://tnreginet.gov.inஎன்ற இணைய வழியில் பெற்றுக் கொள்ளலாம்.இந்த சேவையை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்தார். உயில், டிரஸ்ட் தொடர்பான ஆவணங்களின் நகல்கள், விண்ணப்பம் செய்பவரின் அடையாள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, சார் - பதிவாளர் அலுவலகங்களில் வழங்கப்படவுள்ளது. வணிக வரி மற்றும் பதிவுத்துறைக்கு, 25.1 கோடி ரூபாயில், ஈரோடு மற்றும் துாத்துக்குடியில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. கோபி செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், துறையூர், புதுக்கோட்டையில் வணிகவரி அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன அரகண்டநல்லுார், சத்திரப்பட்டி ஆகிய இடங்களில், 3.62 கோடி ரூபாயில், சார் - பதிவாளர் அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை தலைமை செயலகத்தில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
31 கி.மீ., சாலை பணிகள்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கீழுர் ஊராட்சி. கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான போதமலையில், கீழூர், மேலுார், கெடமலை ஆகிய மூன்று குக்கிராமங்கள் உள்ளன. இங்கு, 1,727 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், இப்பகுதியில் சரியான சாலை வசதி இல்லை. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க, கரடுமுரடான பாறைகளுடன் கூடிய ஆபத்தான மலைப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். வன விலங்குகள், விஷப்பூச்சிகளின் தாக்குதலுக்கும் மக்கள் ஆளாகின்றனர். அவசர தேவைகளுக்கு கூட, உடனடியாக மலையில் இருந்து கீழே வர முடியாத நிலை உள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், கீழூர், மேலுார், கெடமலையை இணைக்கும் வகையில், 31 கி.மீ.,க்கு போதமலையில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, நபார்டு திட்டத்தின் கீழ், 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். சாலை பணிகளை விரைந்து துவங்கி, குறித்த காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.