சென்னை: 'ஆருத்ரா கோல்டு டிரேடிங்' நிதி நிறுவன மோசடி தொடர்பாக நடந்த சோதனையில், 22 லட்சம் ரூபாய் ரொக்கம், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: 'ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட்' என்ற நிதி நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு, 10 முதல் 30 சதவீத வட்டி தருவதாகக் கூறி, 1.4 லட்சம் பேரிடம், 2,438 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்தது. இது தொடர்பாக, அதன் இயக்குநர் ராஜசேகர், அவரது மனைவி உட்பட, 40 பேர் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில், ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, சென்னை, காஞ்சிபுரம், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை, மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டா உட்பட, 21 இடங்களில் உள்ள, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் ஊழியர்களின் வீடு, அலுவலகங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, 22 லட்சம் ரூபாய் ரொக்கம், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில், ஆருத்ரா நிறுவனம், 2,000 கோடி ரூபாய்க்கு சம்பந்தமே இல்லாத நிறுவனங்களுக்கு, 1,230 முறை பண பரிவர்த்தனை செய்திருப்பதும், அந்த நிறுவனங்களில் எவ்வித பொறுப்பிலும் இல்லாத போலி இயக்குநர்கள் மோசடிக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.