சென்னை: வரும் டிசம்பர் 17ம் தேதி நடக்கவிருந்த பா.ம.க., சிறை நிரப்பும் போராட்டம், வரும் ஜனவரி 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சமூக நீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழகத்தில் சமூக நீதியை சிதைத்து, படுகொலை செய்யும் முயற்சிகளில், தி.மு.க., அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் சார்பில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது என்றாலும் கூட, தமிழகத்தின் சமூக நீதி தேவைகளுக்காக, மாநில அரசின் சார்பில் தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவே முடியாது என்று, தி.மு.க., அரசு அடாவடி செய்து வருகிறது. இதை கண்டித்தும், உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரியும், பா.ம.க., சார்பில், வரும் டிசம்பர் 17ம் தேதி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு, நான் தலைமை வகிக்கிறேன். டிசம்பர் 17ம் தேதி, தமிழகம் முழுதும் நடக்க இருந்த அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்பும் போராட்டம், வரும் 2026 ஜனவரி 29ம் தேதி நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.