| ADDED : ஜன 28, 2024 01:30 AM
சென்னை: பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில், சென்னையில் நேற்று பேரணி நடந்தது.அடிப்படை ஊதியம், 36,900 ரூபாய் பெறும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும், 56,900 ரூபாய் பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும் சமப்படுத்தி, மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்குவது சமூக நீதியா? ஆசிரியர் நிலையில் இருந்து, முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற 29 பேரில், 27 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்.இருவர் மட்டுமே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள். கடந்த 45 ஆண்டுகளாக, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அடுத்த பதவி உயர்வு என்ன என்பதே தெரியாமல் உள்ளது. எனவே, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என வலியுறுத்தி, இப்பேரணி நடந்தது.சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் முன்பிருந்து புறப்பட்ட பேரணி, எழும்பூர் காவாங்கரை சாலையை சென்றடைந்தது. பேரணியில் பங்கேற்ற தலைமை ஆசிரியர்கள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.